தீரா

18 3 0
                                    

நிசப்தம் மட்டுமே ஆட்சி புரிந்துக் கொண்டிருந்த அந்த விசாலமான அறையில் பளிச்சென மின்னும் வெண்ணிற பளிங்குச் சுவர்கள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க... வெளிப்புற வெளிச்சம் உள்ளுக்குள் வராவிடிலும் செயற்கை மின்விளக்குகளுக்கான அவசியமே இல்லை என்பது போல ஒளியை தந்துக் கொண்டிருந்தது அந்த பளிங்கு சுவர்கள்.

இது ஒரு பிரம்மாண்ட நூலகம் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக கண்ணாடி கதவிட்ட முப்பதடி மர அலமாறிகள் யாவும் நேர்த்தியான முறையில், அறையின் எல்லா ஓரங்களிலும் நீள நீளமாக நிமிர்ந்து நின்றன. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலாக இருந்த அலமாரிகள், ஒவ்வொன்றும், குறைந்து ஆயிரம் புத்தகங்களையாவது தன்னுள் ஒளித்து வைத்திருந்தது.

பரந்து விரிந்திருக்கும் மைய அறையின் இரு ஓரங்களிலும் இரு வாயில்கள் அமைந்திருக்க... இடது மற்றும் வலது ஓரங்களில், ஒரு மேஜை, ஒரு நாற்காலி போடும் அளவில் குட்டி குட்டி அறைகள் வரிசையாக அமைந்திருந்தது. மௌனம் நிரம்பிய அந்த குட்டி நூலக அறைகளில் ஒன்றினுள் மலையென குவிந்துக் கிடக்கும் புத்தக குவியல்களுக்கு மத்தியில் தன் தலையை தாங்கிப் பிடித்துக்கொண்டு தவிப்பின் உச்சத்தில் அமர்ந்திருந்தாள், தீரா.

அவளை சுற்றிலும் பலவிதமான புத்தகங்கள் சிதறிக் கிடக்க.. அவைகளின் முகப்புகளில் "ரட்சகனின் ராஜன்" "ஆதிகால ரட்சகன்" "ஆதி வளர்த்த பத்ரன்" "ராஜனின் தோழன்" "ரட்சகனின் மும்மணிகள்" "ரட்சகனின் மறுபிறப்பு" என இருக்கும் அனைத்து புத்தகங்களும் ஆதிலோகத்தின் ரட்சகனை குறிப்பதாகவே இருந்தது.

ஆனால், அவை எவையுமே இவளின் தேடலை நிறைவு செய்திடவில்லை என்பதுபோல் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவளின் பார்வை, அடுத்ததாக எந்த புத்தகத்தை எடுக்கலாமென புத்தக அலமாரிகளின் பக்கமாக திரும்பி, அமர்ந்த இடத்திலிருந்தே அலசி ஆராயத் தொடங்கியது.

ரட்சகன் குறித்து ஆதிலோகத்தில் இருக்கும் புத்தகங்களில் கிட்டதட்ட முக்கால்வாசி தகவல்களை இந்த ஓராண்டில் மட்டுமே சேகரித்து விட்டாள் இவள். ஆனால், இவளின் கேள்விக்கான பதில்தான் இன்னும் கிடைத்தபாடில்லை. அந்த ஆதங்கத்துடன் அவள் தலை முடியை பிடித்துகொண்டு மேஜையில் தலைசாய்த்து அமர்ந்தவாறே, வேறு ஏதேனும் புத்தகத்தின் மூலம் தன் தேடலுக்கான விடை கிடைத்திடாதா என்னும் ஏக்கத்துடன் புத்தக வரிசைகளை நோட்டமிட்டு கொண்டிருக்க... இத்தனை நாளும் இல்லாமல் இன்றுதான் அவள் கண்ணில் தட்டுபட்டது அந்த வித்தியாசமான புத்தகம்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now