காற்று வெளியிடை...

23 4 29
                                    

ரட்சகனும் அவனுடைய நட்புகளும் சேர்ந்து போட்டுக் கொண்டிருந்த திட்டத்தை சுவாரசியமாக கேட்டபடி கண்களை மூடிக்கொண்டு சோஃபாவில் சாய்ந்திருந்த தீரா, திடீரென அனைத்தும் அமைதி ஆகிவிட்டத்தில் குழப்பம் கொண்டவளாய் கண்விழித்து பார்த்த நொடி, முகத்தில் ஒரு இனம் புரியாத கடுகடுப்புடன் ரட்சகனை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தான், நிழல் தேசத்து இளவரசன்.

எப்படி அவள் மூளை இவ்வளவு வேகமாக செயல்பட்டது என அவளுக்கே தெரியவில்லை... கிச்சன் கதவை தாண்டி எந்த சத்தமும் செல்ல முடியாதபடிக்கு ஒரு மாய திரையால் அதை மூடிய அதே நேரத்தில் உள்ளிருக்கும் பார்கவி அம்மா வெளியே வராமல் பார்த்துக்கொள்ளும்படி அர்ஜுனிடம் கத்திக்கொண்டே வீட்டினுள் நுழையும் ஷேனாவின் முன்னால் ஒரு மாய கேடையத்தை உருவாக்கியிருந்தாள்.

எல்லாம் நொடிக்கணக்கில் நடந்து முடிந்தது. யார் பேசியது என புரியாமல் அனைவரும் விழிக்கவும்தான் அவளுக்கே நினைவு வந்தது, தான் எவர் கண்ணுக்கும் தெரியாமல் இருக்கிறோம் என்பதும் ரட்சகன் அவனின் சக்திகளை உணரும் வரையில் இப்படியே தான் இருக்க வேண்டும் என தனக்குத்தானே செய்துக்கொண்ட சத்தியமும்.

இவனை இப்படியே விட்டிருந்தால் கூடத் தங்கள் ரட்சகனின் சக்திகள் வெளிப்பட இது ஒரு வாய்பாக இருந்திருக்குமோ எனத் தன்னை தானே நொந்துக் கொண்டவள், சரி, தடுத்தது தடுத்தாகிவிட்டது. இனி இவனை மொத்தமாக தடுத்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை பார்க்கலாம் என முடிவெடுத்துக்கொண்டு, தன்னுடைய கரும்பளிங்கு நிற ஆத்ம-வாளை வெளிக்கொனர்ந்தபடி ஷேனாவை நோக்கி முன்னேறினாள்.

இன்னுமும் அவள் தன் மறைவான உருவத்தில் தான் இருக்கிறாள். ஆனால், காரிருளிலும் தன்னை சுற்றிலும் நடப்பதை கச்சிதமாக உணர்ந்து பழகியிருந்த ஷேனா மற்றும் சமாராவிற்கு தீராவின் இந்த மறைவான தோற்றம் ஒன்றும் பெரிய சவாலாக இல்லை. தன்னை தடுக்கும் சக்திக்கு காரணமான உருவம் தன்னை நோக்கி வருவதை துல்லியமாக உணர்ந்து, முதுகில் வைத்திருக்கும் தன் ஆத்ம-வாளை மட்டும் கையில் உருவிய ஷேனா நேராக தீராவை தாக்கத் தொடங்கிட, அவர்களை அப்படியே விட்டுவிட்ட சமாரா, இப்போது, ரட்சகனை நெருங்கத் தொடங்கினாள்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now