ரட்சகனின் ஆத்ம-ஒளி நுழைவாயில்

12 4 13
                                    

ரக்ஷவின் பாதங்கள் அந்த புனித தளத்தின் வாயிலை தொட்ட நொடிமுதலாக அவனை சுற்றியிருந்த அனைத்துமே அவனுக்கு நிசப்தமாகியது. அவன் செவியில் ஒலித்தது ஒன்றே ஒன்று தான். ஒரு குரல். தன் பெயரை சொல்லி அழைக்கும் ஒரேயொரு மெல்லியக் குரல்.

அக்குரலை தொடர்ந்து தன்னைமறந்து முன்னோக்கி நடந்தவன் கவனிக்கவில்லை, அந்த வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருக்கிறது; அந்த பூட்டை தாண்டி ஒரு விசை தன்னை உள்ளே அழைத்துச் செல்கிறது என்பதையெல்லாம்.

அவனுக்குப் பின்னால் ஏகபட்ட விஷயங்கள் நடக்கிறது. இருந்தும், எதையும் கவனிக்காத ரட்சகனோ நேராக முன்னோக்கி மட்டுமே தான் நடந்தான். அந்த மாய தளத்தினுள் நுழைந்தவனுக்கு எதிரில் தடையாக நின்றிருந்த வாயில்களும் ரட்சகனின் வரவை அறிந்துத் தானாகவே வழி கொடுத்து நின்றது.

வெளியே, தனது சக்திகளையும் தன்னையும் அபகரிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இருவரின் பார்வையிலும் இருந்து வெகுதூரம் வந்த பின்புதான் அவன் தன்னிலையை அடைந்தான். ஆனால், ரட்சகனை முழுதாகத் தன் பிடியிலிருந்து விட்டுவிடாத அக்குரலோ, அவனை தன்னுடைய மாயத்திலிருந்து விடுவித்தக் கையோடு அடுத்த மாயக் கட்டுக்குள் வழியனுப்பிவிட்டு தான் சென்றது.

தான் நிற்கும் இடத்தின் தோற்றத்தை கண்டு அவ்விடத்திலேயே மெய்மறந்து நின்றான், ரக்ஷவன். குரலை தொடர்ந்தே உள்ளே வந்திருந்தவன், ஆலயத்தின் முக்கிய அறைக்குள்தான் இப்போது நிற்கிறான். இன்று மாலையில் அபியும் தீராவும் ஆதிலோகத்தின் மாயத்தை உணர்ந்த அதே இடம். ஆனால், அவர்கள் பார்த்தபோது இருந்த நிலையில் இல்லை அந்த மாயச் சுவர்கள் யாவும்.

தங்களின் ரட்சகன் ஒருவழியாக தங்களை பார்ப்பதற்கு இவ்விடம் வந்துவிட்டான்... தனக்கான இருப்பிடத்தை அவன் அடைந்துவிட்டான் என்பதை உணர்ந்தப் பூரிப்பில், பல வண்ணக் கலவைகளில் மின்னிக் கொண்டிருக்கிறது, அங்கிருக்கும் சுவர்கள்.

என்னதான் ரட்சகனின் உடலின் வழியே உதிரமாக ஓடும் மாயத்தின் ஆற்றலை இன்றளவிலும் அவன் உணராமல் இருந்தாலும் அவன்தான் ரட்சகன் என்பது பொய் இல்லையே! அவனுள் ஓடும் மாயத்தின் ஈர்ப்பானது அவன் அழைத்தால்தான் வெளிவர வேண்டும் என விதிமுறைகள் எதுவும் இல்லையே! அவனை மீறிய அவனின் ஆற்றல்கள் அந்த சுவர்களின் வண்ணங்களை கையில் பிடிக்குமாறு ரக்ஷவனின் மனதினுள் உந்துதல் கொடுத்தபடியே இருக்க... தயங்கித் தயங்கி மேலெழும்பிய அவன் கைகள், சில நொடி தயக்கத்தின் பின் மெல்லமாக அந்த சுவர்களின்மேல் பதிக்கப்போன சமயத்தில் சரியாக அவ்விடத்தை அடைந்தான், அர்ஜுன்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now