இன்றைய பொழுது முழுக்க ரக்ஷவனின் கவசம் உடையாமல் தான் இருக்கும் என்பதால், அதற்குள், தன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிடுவதற்காக இன்று பள்ளி முடிந்ததும் தன் ஆதிலோக வீட்டிற்குச் செல்லாமல், நேராக வேதபுர (வேந்தன்யபுரத்தின் நவீன கால பெயர்) வனத்திலிருக்கும் கோட்டையை நோக்கி நடந்துக் கொண்டிருக்கிறாள், தீரா. இப்போது அவள் சிந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்திருப்பது ரக்ஷவனும் வான்மதியும் தான்.
கடந்த பதினான்கு ஆண்டுகளாக ரக்ஷவன் குறித்த சிந்தனைகள் அவளை விடாமல் துரத்துவது வழக்கம்தான். ஆனால், இந்த ஓராண்டாக வானுவும் அதனுள் நுழைந்து விட்டாள். அவள், பூமியில் வாழும் சாதாரண பெண் தான், எனினும், அவளுடனான பழக்கம் தீராவிற்கு ஏனோ வித்தியாசமாகவே தெரிகிறது.
"தீரா, நீயிர் மட்டும் தனித்து வரவளித்து இருக்கின்றீர்? நீலி வரவில்லையா?" யோசனையுடன் நடந்து வந்து கொண்டிருந்தவளை சட்டென களைத்தது ஒரு குரல். அக்குரலை நொடியில் அடையாளம் காணத் தெரிந்தவளுக்கு, குரலின் உரிமையாளரை கண்டுபிடிக்கத் தான் சிரமமாக இருந்தது. ஓரிரு நொடிகள் மேலும் கீழுமாகத் தேடிக் கண்டு பிடித்துவிட்டாள், அந்த இரண்டு-இன்ச் உருவத்தினை. இப்போது தீரா வந்திருக்கும் அதே கோட்டையில், கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற சேவன் தான் அது.
"ஏன்டா சேவா, நான் எப்ப வந்தாலும் நீ ஏன் அவளையை கேக்குற? கண்ணுக்கு முன்னாடி நிக்குற என்னைய என்னைக்காச்சும் கேட்டுருக்கியா நீ?"
"ஹான்? நான் தான் உம்மை என் கண்ணாற கண்டு விட்டேனே! நலமாகத் தானே என் முன்னே வீற்றிருக்கின்றீர். பிறகேன் உம்மை கேட்க வேண்டும்?"
"சரிதான் போ... எப்டியாச்சும் சமாளிச்சுடுற."
"அது போகட்டும்.. நீலி எங்கே?" தன் கேள்விக்கான பதில், வேண்டுமே வேண்டுமெனப் பிடிவாதமாக நிற்பதுபோல் நின்றான், அந்த விரல் அளவு மனிதன்.
"அவள எப்பவுமே கூட்டிட்டு வர முடியாது டா சேவா. நா தா உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்ல, அபி மாமா என் கூட வந்தா மட்டும்தான் என்னால மாயலோகம் போக முடியும். அங்க போனா தா நீலிய கூட்டிட்டு வர முடியும்" என்றுவிட்டு, அங்கே மண் தரையில் கால்நீட்டி அமர்ந்துவிட்டாள். சிறிதுநேரம் அவளிடம் பற்பல கேள்விகளை தொடுத்துக் கொண்டிருந்த சேவனும் ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிட.. அவளருகிலேயே அவனும் அமர்ந்துவிட்டான்.
YOU ARE READING
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poetryகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...