ரக்ஷவன், கனவு வாள்!

19 3 35
                                    

கண் பார்க்கும் தொலைவு வரை வெண்ணிற பணிமூட்டத்தை தன் போர்வையாய் போர்த்திய மலைகள் வீற்றிருக்கும் ஓரிடம்... நாடெங்கும் கதிரவன் தன் கதிர்களை பரப்பிக் கொண்டிருந்த அந்த அழகிய காலை பொழுதில், சூரியன் வந்தும் இன்னும் அதன் கதிர்கள் நிலத்தை தீண்டாத ஓரிடம். குளிருக்கு இதமாக கம்பளியால் நெய்த ஆடையை அணிந்து, அமைதியான தோரணையில் உலாவும் மக்கள்; கூட்டமாய் வாழவில்லை எனினும் ஒற்றுமையாய் வாழப் பழகியிருந்த அழகிய ஓரிடம். அவ்வளவு எளிதில் எவர் கண்ணிலும் சிக்காத அழகிய சிறு கிராமம். மேகமலை அடிவாரத்தில் உள்ள திரிபுரா நகரம்.

அவ்விடத்தில், கதிரவன் தன் கதிர் கீற்றின் வெம்மையால் பனிக்காற்றின் குளுமையை உடைத்து இதமான வெப்பத்தை இப்போதே மெல்ல மெல்ல புகுத்திக் கொண்டிருந்தது.

அத்தகைய அழகோவியமான அந்த மலை கிராமத்தின் சற்று உயரமான இடத்தில் அமைந்திருந்தது, அந்த மஞ்சள் நிற மரவீடு. அருகிலேயே, அழகிய மீன்கள் துள்ளி விளையாடும் சிற்றோடை! சற்று தொலைவில், நாளுக்கு இருமுறை மட்டுமே வரும் ஒரேயொரு பேருந்துக்காக அமைந்துள்ள ஒரு பேருந்து நிறுத்தம். அந்த வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தால், சூரிய உதயத்துடன் சேர்த்து இந்த ரம்மிய காட்சிகள் அனைத்தும் மனதிற்கு இதம் சேர்க்கும் அழகு காட்சிகளாய் தோன்றும். ஆனால், இப்போதைக்கு இக்காட்சிகளை ரசிப்பார் எவருமின்றி அந்த ஜன்னலுக்கு திரையிட்டிருக்க... கதிரவனோ தன் கதிர்களை அந்த வீட்டின் ஜன்னலை மூடியிருந்த இளநீல திரையையும் தாண்டி நேராக அவன் கண்களில் படுமாறு வம்படியாக செலுத்தியது. ஆனால் அவனோ, ஆழ்ந்த உறக்கத்தில்... தினந்தோறும் தன்னை இம்சிக்கும் அந்த அற்புத கனவில் முழுவதுமாய் தன்னை மூழ்கடித்து கனவுலகின் பிடியில் முழுவதுமாக ஆழ்ந்துபோய் இருந்தான்.

தன்னை தீண்டும் பகலவ கதிர்களை வெறுத்தவன், தலையணையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு மீண்டும் கனவில் பயணிக்க தொடங்கிய அந்த நேரம், "ரக்ஷவ்... எழுந்திரு டா தம்பி... எவ்வளவு நேரம் தூங்குவ? இன்னும் விடியலையா உனக்கு?" கட்டளையாக வந்த அந்த இனிமை குரலுக்கு மறுப்பு தெரிவித்துப் பழகிடாதவன், தன் விருப்பத்தையும் மீறி நிஜ உலகிற்கு வந்ததுடன், வேண்டாவெறுப்பாக உறக்கத்தை கலைத்து எழுந்தான். மாயத்தின் வாரிசான ஆதிகால ரட்சகன், ரக்ஷவன்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now