19

817 49 10
                                    

வாசல் நிலைப்படி அருகே கண்கள் செருகி அமர்ந்திருந்த தாராவைப் பார்த்ததும் ஆதித் ஆயாசமானான்.

கார் விளக்கின் மஞ்சள் வெளிச்சம் முகத்தில் பட்டதும் எழுந்துவிட்டாள் தாரா. ஆதித் அவளைத் தாண்டிக்கொண்டு உள்ளே செல்ல, கண்களைத் தேய்த்தவாறே எழுந்து உள்ளே வந்தாள் அவளும். வரவேற்பறையில் இருந்த மேசையில் தனது தோள்பையை வைத்தவன், அலுப்பாகக் கைகளை முறுக்கினான்.

"தூங்கலையா?" என்றான் எங்கோ பார்த்தபடி.

தாரா தடுமாறியவாறு, "அ.. அதாவது.." என இழுக்க, அவனோ பொறுமையின்றி, "லிசன், இந்தமாதிரியான பேபிசிட்டர் வேலையெல்லாம் நீ பார்க்கத் தேவையில்லை. என்னை கவனிச்சுக்க எனக்குத் தெரியும். என் பர்சனல் ஸ்பேஸ்ல யாரும் தலையிடத் தேவையில்ல" என்றுவிட்டு நில்லாமல் மாடியேறிச் செல்ல, தாரா தலையைச் சொரிந்தாள் குழப்பமாக.

அவளது அறையிலிருந்து அப்போது எட்டிப்பார்த்த இந்திராணி, "சார் கீ போல் லேன்?" என்க, தாரா தோளைக் குலுக்கிக் கைவிரித்தாள்.

இரவு எட்டு மணிக்கு இந்திராணியுடன் அமர்ந்து அவர் செய்த சப்பாத்தியையும் பருப்புத் துவையலையும் சாப்பிட்டவள், சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கல்லூரி நண்பர்களுக்குக் குறுஞ்செய்தியில் பேசினாள். பின் அம்மாவிற்கு அழைத்தாள். அவரோ பட்டென அப்பாவிடம் கைபேசியைத் தந்துவிட, வெறுமே உம்கொட்டிவிட்டு முடிந்தவரை வேகமாக அழைப்பைத் துண்டித்தாள்.

பத்து மணியளவில் தூங்குவதற்காக அவளது அறைக்குச் செல்ல, அறையின் பிரம்மாண்டமும், இருளும், தனிமையும், புது சூழலும் அவளை பயமுறுத்தின. பத்து நொடிகள் கூடத் தனித்திருக்க முடியாமல் உடனே வெளியே ஓடி வந்துவிட்டாள் தாரா. புழக்கடைப் பக்கம் இருந்த இந்திராணியின் அறைக்கதவைத் தட்டியவள் அரண்ட பார்வையுடன் பாதி சைகையும் பாதி அழுகையுமாய் நிற்க, அவர் அவளது தோளை அழுத்தித்தந்து சமாதானம் செய்தார். கண்களையும் துடைத்துவிட்டார்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now