அலுவலகம் திறக்க ஒருமணிநேரம் இருக்கும்போதே தன்னறைக்கு வந்தமர்ந்து நெடிய பெருமூச்சொன்றை விட்ட ஆதித்தை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தான் ராஜீவ்.
"பர்வதம்மாவோட ஆதிக்கம் அப்டியே உங்க முகத்துலயே தெரியுதே பாஸ்! விட்டா உங்க கூடவே ஆபிசுக்கும் வந்திருப்பாங்க போலவே?"
"ஹ்ம். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க."
தமாஷாகப் பேசவந்த ராஜீவ் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான்.
"பாஸ்.. ஜோக்கடிக்கறீங்களா? அதை ஏன் சீரியஸான முகத்தோட சொல்றீங்க?"
"ஏன்னா நான் ஜோக் அடிக்கல. பாட்டி, மாம், டாட், எல்லாருமே வந்துகிட்டிருக்காங்க பேக்டரியைப் பார்க்க."
"ஓ மை காட்!"
"போய் கொஞ்சம் ப்ரொடக்சன் யூனிட்டைப் பாரு. எதாவது இடைஞ்சல் இருந்தா அதைக் கவனி. பாட்டி வந்து பார்க்கறப்ப என் மானத்தை வாங்காம காப்பாத்து ராஜீவ்."
"எஸ் பாஸ்!"
அவன் அவசரமாக வெளியேற, ஆதித் பாட்டிக்குக் காட்டுவதற்காகத் தரவுகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினான்.
***
"எனக்கு ரொம்ப திருப்திடா கண்ணா.."
"தேங்க்ஸ் பாட்டி, கம்பெனி உண்மைலயே நல்லா நடக்குது."
"கம்பெனியை யாரு சொன்னா!? தாராக்குட்டி இங்கே சந்தோஷமா இருக்கா. அதுவே எனக்குப் போதும்!"
ஆதித் ஆயாசமாகக் கண்களைச் சுழற்றினான். சுமார் மூன்று மணிநேரங்கள் ஆலையைச் சுற்றிக்காட்டிய பின்னர் பர்வதம்மாவிடம் கிடைத்த நன்மொழி இதுதான் எனும்போது, மேற்கொண்டு பேசத் திராணியில்லை அவனுக்கு.
அலுவலக அறையில் அப்பாவும் அம்மாவும் அமர்ந்து சில மேலாளர்களுடன் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் சென்று அவர்களுடன் இணைய, தரவுகளை மூடிவிட்டு எழுந்தார் மாதவன்.
"அக்கவுண்ட்ஸ் எல்லாம் பர்ஃபெக்டா இருக்கு ஆதித். யுவர் செக்ரெட்டரி இஸ் எ க்ரேட் கைய்."