5

1K 59 53
                                    

வாங்கிய துணிப்பையை நெஞ்சோடு ஆனந்தமாக அணைத்துக்கொண்டு ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தாள் தாரா.

அவளுக்கு அருகில் தனது பையையும் அதேபோல் அணைத்துப் பிடித்தபடி முகம்கொள்ளாப் புன்னகையோடு அமர்ந்திருந்தான் தனுஷ்.

மணியைப் பார்த்தால் எட்டு ஐம்பது. அப்பாவின் ஷிஃப்ட் முடிவது ஒன்பது மணிக்கு. அவர் குடியிருப்பிற்கு வருவதற்குப் பத்து நிமிடங்கள். ஆகமொத்தம் இன்னும் இருபது நிமிடங்களுக்குள் வீட்டில் இருந்தாகவேண்டும் அவர்கள்.

"டைமுக்கு வீட்டுக்குப் போயிடுவோமாடி??"

பேருந்து ஊர்ந்து செல்லும் வேகம் சற்றே கலக்கமளித்தாலும், அம்மாவின் சமாளிப்புத் திறமையை நம்பிக்கையாகப் பற்றிக்கொண்டு, தாரா சிறு புன்னகையைத் தேக்கினாள் உதட்டில். "அதெல்லாம் போயிடலாம்.. புலம்பாம இரு!!"

நாக்கை நீட்டிப் பழிப்புக் காட்டிவிட்டு, தனது கைபேசியில் வீடியோ கேம்ஸ் விளையாடத் தொடங்கினான் தனுஷ். தாரா ஜன்னலின் வழியே சாலையில் விரையும் கார்களைப் பார்த்தாள். ஏனோ சற்றுமுன் பேருந்து நிறுத்தத்தில் பார்த்த ஆண்மகனின் நினைவு வந்தது. எங்கேயோ பார்த்ததுபோன்றே இருந்த அந்த முகம் அவளை சற்றே யோசிக்க வைத்தாலும், பேருந்தில் பலத்த ஹாரன் சத்தம் அதைக் கலைத்து மீண்டும் தன்னிலை திரும்பவைத்தது அவளை. அவள் தம்பியைத் திரும்பிப்பார்த்தாள். காற்றில் அவனது தலைமுடி கலைந்திருக்க, அதை சரிப்படுத்த அவனது தலையைத் தொட முயன்றாள் அவள். அவனோ அலட்சியமாக நகர்ந்து அவள் கையைத் தட்டிவிட்டான். தோளில் ஒன்று வைத்தாள் அவனுக்கு. அவனோ விளையாட்டில் மும்முரமானதால் பதிலடி தரவில்லை.

இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் அவசரமாய்ப் பைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டு சாலையில் குதித்தாள் அவள். "ஹேப்பி தீபாவளி" எனப் பேருந்தைப் பார்த்து சத்தமாகக் கத்த, சிலர் சிரித்தனர்; சிலர் கையசைத்தனர்: ஓரிருவர் பதில்வாழ்த்தும் கூறினர். தனுஷ் தலையில் தட்டிக்கொண்டு, அவளையும் தோளில் அடித்தான். மாறிமாறி அடித்துக்கொண்டே சிரிப்போடு வேகவேகமாக அடியெடுத்துவைத்து, தங்கள் தெருவுக்குள் வந்துவிட்டனர் அவர்கள். காம்ப்பவுண்ட்டை எட்டிப் பார்த்தபோது, அப்பாவின் டிவிஎஸ் 50 இல்லை அங்கே. நிம்மதிப் பெருமூச்சுடன் வீட்டினுள் நுழைந்து அம்மாவை சத்தம்போட்டு அழைத்தாள் அவள்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now