ஆதித் அலுவலக அறையில் அமர்ந்து, கணக்குப் புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். சென்ற வருடத்தைவிட வரவும் செலவும் கூடியிருந்தன. எனினும் நிகர லாபம் அவன் எதிர்பார்த்த அளவில் வரவில்லை என்பதால், செலவுக் கணக்குகளைப் புரட்டிக்கொண்டிருந்தான் தீவிரமாக.
கண்ணாடிக் கதவு தட்டப்பட்டுத் திறந்துகொண்டது.
ராஜீவ் எட்டிப்பார்த்தான்.
"பாஸ்... மணி ஆறரை.. பார்ட்டி ஏழு மணிக்கு."
"தேங்க்ஸ் ராஜீவ். நீ ஹோட்டலுக்குப் போய் கடைசியா ஒருதடவை எல்லாத்தையும் செக் பண்ணிடு. நான் ஏழு மணிக்கு வந்துடறேன்."
கண்களை லேசாகத் தேய்த்தவாறே எழுந்து சோம்பல் முறித்தவன், வெளியேறினான் அலுவலகத்தைவிட்டு.
கார் வீட்டு வாசலில் நிற்கையில் மணி ஆறு ஐம்பது. தாமதமாவதை உணர்ந்தவனாக அவசர அவசரமாகப் படியேறி உள்ளே சென்றவன், இந்திராணியிடம், "ஷி கொத்தாய்?" (அவள் எங்கே?) என வினவ, அவளது அறையை நோக்கிக் கைகாட்டினார் அவரும்.
பொறுமையின்றிச் சென்று கதவைத் தட்டினான் அவன்.
"லேட்டாச்சு, கொஞ்சம் சீக்கிரம்!"
கதவு திறக்கப்பட்டது, சற்றே தயக்கமான ஒரு கரத்தால்.
ஆதித்தின் அவசரப்பார்வை அவளை அடைய, ஒருகணம் அவனது அவசரங்கள் அனைத்தும் மறக்கப்பட்டன.
சிவப்பு ஷிஃபான் புடவையும், அதற்குப் பொருத்தமாய் அதே நிறத்தில் வெல்வெட் ரவிக்கையும், கழுத்தில் குட்டிக்குட்டி வெண்முத்துக்கள் கோர்த்த மாலையும், அதனோடு பொருந்தும் முத்துக் கம்மல்களும் அணிந்து, கூந்தலை இடது தோளில் புரளவிட்டு, காதோரம் முத்துப்பதித்த க்ளிப் ஒன்றை வைத்திருந்தவள், அவனது ஒப்புதலுக்காக கீழுதட்டை மடக்கியவாறு தனது மையெழுதிய விழிகளால் அவனை எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தாள்.
அவன் திகைப்பில் வாயைத் திறந்து திறந்து மூடினான்.
"ராஜீவோட சிஸ்டர் ஷீத்தல் வந்திருந்தாங்க. அவங்கதான் இதையெல்லாம் செலெக்ட் பண்ணாங்க.. எனக்கு இதுல எல்லாம் அனுபவமே கிடையாது, ஸோ, அவங்களே எல்லாம் செஞ்சாங்க.. ஹேர்.. மேக்கப்.. ட்ரெஸ்.. இது ஓகேவா உங்க பார்ட்டிக்கு?"