"சேர்ந்து சாப்பிடலாமா?"
வார்த்தையின்றி அவளை ஒருகணம் பார்த்தவன், மறுகணம் நெருங்கிவந்து அணைத்துக்கொண்டான் அவளை.
தாரா திகைத்தாலும், அவளுக்குமே அந்த அணைப்பும் ஆதரவும் தேவைப்பட, எதிர்ப்பின்றி நின்றாள் அவளும்.
"எனக்காக சாப்பிடாம தூங்காம யாரும் இதுவரை வெய்ட் பண்ணினதில்லை"
அவள் காதருகே தாழ்ந்த குரலில் தழுதழுத்தான் அவன்.அவள் தளர்வான புன்னகையோடு, "எனக்காகவும் இதுவரை சாப்பிடாம யாரும் நாலு மணிநேரம் ட்ராவல் பண்ணி வந்ததில்லை" என்க, அவன் சிரித்தான்.
அணைப்பைத் தளர்த்திவிட்டு பார்வையைத் தவிர்த்து தூரமாய்ப் பார்த்தான் அவன்.
"ஐம் ரியலி ஸாரி. அன்னிக்கு மோனல் பேசினப்பவே நான் பதில் சொல்லியிருக்கணும். பிரியப் போற உறவுதான் நம்மோடது. ஆனா என்னிக்கோ ஒருநாள் நடக்கப்போறதை நினைச்சுக்கிட்டு முட்டாள் மாதிரி உன்கிட்ட நான் நடந்துக்கிட்டேன்.
சத்தியமா சொல்றேன் தாரா.. உன்னை கஷ்டப்படுத்தணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. உன்னை சந்திச்சப்போ, 'கல்யாணம் வேணாம்'னு சொன்னியே, அன்னிக்கே உன்மேல மரியாதை வந்தது எனக்கு. உன் மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை நீ வாழணும்னு தான் நானும் நினைச்சேன். ஆனா விதிவசமா நானே அதுக்கொரு தடையா ஆகிட்டேன்.."அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
"நானும் நம்ம நிலமையை மறந்துட்டு உங்கள்ட்ட எதையெதையோ எதிர்பார்த்தது தப்பு. அதுக்கு ஸாரி. இருக்கற வரை நல்லபடியா இருப்போம். பிரிஞ்சாலும் சந்தோஷமா பிரிவோம். நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்க வேணாம். இன்னிக்கு வாழ்வோம்."
ஆமோதித்துத் தலையாட்டினான் ஆதித்தும்.
"தேங்க்ஸ் தாரா."
உணவு மேசைக்கு இருவரும் செல்ல, இரு தட்டில் உணவை வைத்து அவன்புறம் ஒன்றை நீட்டினாள்.
"சமாதானம்?"அவன் சிரித்தான். "சமாதானம்."
போஹா எனப்படும் அவல் உப்புமாவும், அதனுடன் காய்கறி மசாலாவும் ஆதித்தின் பசியைத் தீர்த்துவைக்க, சாப்பிட்டுக்கொண்டே அவளிடம், "கோபம் எப்டி போனது? ராஜீவ் எதாச்சும் சொன்னானா?" என வினவினான்.