ஆதித் கிளம்பியதும் வீட்டினுள் ஒருவித அசாத்திய அமைதி நிலவியது. இந்திராணி சமையலறையில் மும்முரமாகிவிட, தாரா உதவச்சென்றபோது அவர் பதறிப்போய்த் தடுத்து அவளை அனுப்பிவிட்டார்.
வீட்டில் வெறுமனே இருக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. அவளுக்கான பணியென அங்கு எதுவுமே இல்லை. தங்கள் வீட்டில் இதுபோல என்றுமே ஓய்வாக இருந்ததே இல்லை அவள். தெருவில் இறங்கி விளையாடுவாள்; மொட்டைமாடியில் பறவைகளுடன் பேசிக்கொண்டிருப்பாள்; பஞ்சாலைக்குச் சென்று விளையாடுவாள்; கோவிலுக்குக் கூடச் செல்வாள். இத்தனையும் இருபது வருடங்கள் ஒரே வீட்டில், ஒரே ஊரில் இருந்தபோதும்கூட சலிக்காமல்.
இன்றோ புதியதொரு ஊருக்கு, புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள்.. ஆனாலும் செய்வதற்கு உருப்படியான வேலையில்லை. ஆதித் காலையில் செய்யச் சொன்னபடி, தன்னறைக்குச் சென்று தனது சான்றிதழ்களைச் சரிபார்த்து எடுத்து வைத்தாள். தனது கல்லூரியில் இன்னும் மாற்றலுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தது நினைவுவர, கல்லூரியை அழைத்து அதற்கான வழிமுறைகளைக் கேட்டாள் அவள். அவர்களோ நேரில் வந்தால் மட்டுமே அவளது கோரிக்கையைக் கவனிப்போமெனக் கூறிவிட, சலித்துக்கொண்டே வந்து கூடத்துத் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள் அவள்.
கண்கள் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் மனம் என்னவோ வேறொரு உலகில் இருந்தது.
கல்லூரிக்குச் சென்று எப்போது மாற்றல் வாங்குவது, எப்போது மறுபடி படிப்பைத் தொடர்வது? பேசாமல் தன்னுவை அனுப்பி கல்லூரியில் பேசச் சொல்லலாமா? தன்னுவிடம் பேசி எவ்வளவு நாட்களாகின்றன? ஒருநாள்தானா? சே.. நீண்டகாலம் பேசாததுபோல் உள்ளதே!
தன்னுவிடம் பேசலாமென்றால் அவன் இந்நேரம் பள்ளிக்குச் சென்றிருப்பான். அம்மா குழுவிற்குப் போயிருப்பார். அப்பாவிடம் பேசத் தைரியம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர் வேலையில் இருப்பார். தன் உலகம் இவ்வளவு சின்னதென நம்பமுடியவில்லை அவளால்.