தாராவின் உலகத்தில் இதுபோன்ற செயல்கள், சொற்கள், எல்லாமே புதிது.
"நம்மளை சேர்த்துவச்சு பாக்கதான் அவங்க வந்திருக்காங்க, அவங்க இங்கேயே இருக்கறதும் கிளம்பிப் போறதும் உன் கைல தான் இருக்கு."
ஜன்னலின் வழியே வந்து விழுந்த பாதி வெளிச்சத்தில், சாம்பல் நிற சாயலில் அவனது முகம் தன்னெதிரில் தெரிந்தபோது தாராவின் நெஞ்சம் கூண்டிலிட்ட பறவையாகப் படபடத்தது. தன்னந்தனியாக அவனுடன் ஓரறையில் இருப்பது வேறு மனதை உறுத்தியது.
அது ஏனென்று தான் சரியாகத் தெரியவில்லை அவளுக்கு.
அசமயமாக நடந்ததொரு போலிக் கல்யாணம் அது. அதிலே என்ன உறவு கொண்டாட முடியும்? பொய்க் கணவனா? அந்த உறவுக்கு என்ன வரையறை? நண்பர்கள் அளவிற்குக் கூட நெருக்கமோ, புரிதலோ இல்லாதபோது, அவனிடம் எப்படி அந்நியத்தனம் இல்லாமல் பழகுவது?
கொட்டக்கொட்ட விழித்திருந்தவளின் மனதில் கேள்விகள் கொதிக்க, பதில்கள்தான் எங்கே கிடைக்குமெனத் தெரியவில்லை.
விடியல் வெளிச்சம் மெல்ல அறையில் நுழைந்தபோது ஆதித்திடம் சலனம் தெரிய, தாரா சட்டெனப் போர்வைக்குள் நுழைந்துகொண்டாள். ஆதித் அவளைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாக எழுந்தான் கைகளை முறுக்கி விரித்துக்கொண்டு. அடிக்கத் தொடங்கிய அலாரத்தை இடைவெட்டி நிறுத்திவிட்டு, முழுக்கை டீஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு தனது காலைநேர ஜாகிங் மற்றும் உடற்பயிற்சியை தொடங்கச் சென்றுவிட்டான்.
தாரா மெதுவாக எழுந்து அமர்ந்தாள். மேசைமீது இருந்த டிஜிட்டல் கடிகாரம் அதிகாலை ஐந்து முப்பதென நேரம் காட்டியது. சோர்வாக மீண்டும் படுத்துவிட்டாள் அவள்.
"தாரா.. தாரா.. ஜாகோ துரந்த்!"
வாரிச் சுருட்டிக்கொண்டு அவள் எழ, இந்திராணி இரண்டடி பின்வாங்கினார். ஆதித்தை எதிர்பார்த்து விழித்தவள் பெருமூச்சு விட்டாள்.
"அஞ்சரை தானே ஆகுது.. அதுக்குள்ள என்னக்கா?"
"கோலேஜ் ஜானா ஹி நஹி? தேக்!" என்றபடி கடிகாரத்தை அவர் காட்ட, அது இப்போது ஏழு பத்தெனக் காட்டிச் சிரிக்க, அதெப்படி இரண்டு நொடிகள் இரண்டு மணிநேரமாய் மாறுமெனத் திகைத்து விழித்தாள் அவள்.