அந்த வாரம் முழுவதும் தாராவிற்கு மிகமிக இனிமையாகக் கழிந்தது. ஆதித் அவளிடம் யதார்த்தமாகப் பேசத் தொடங்கியது ஒரு காரணமென்றாலும், இன்னபிற காரணங்களும் இருந்தன அம்மகிழ்ச்சிக்கு.
இந்திராணியும் அவளும் நல்ல நண்பர்களாகியிருந்தனர். இப்போதெல்லாம் சமையலறைக்குள் அவளை அவரே அழைத்துக்கொண்டார் பெங்காலி சமையல் கற்றுக்கொடுக்க.
ஓட்டுநரான தாஸையும் 'அண்ணா, அண்ணா' என்றழைத்து இயைந்திருந்தாள் அவள். அவரது முழுப்பெயர் ரவிதாஸ் என்பதையும் அறிந்துகொண்டிருந்தாள். அவரிடம் ஓரிரு தெலுங்கு வார்த்தைகளும் கற்றிருந்தாள்.
வெளி கேட் அருகே காவலாளியாக அமர்ந்திருக்கும் ஐம்பதைத் தாண்டிய அப்பாஸ் அகமத்தையும் 'அங்க்கிள்' என்றழைக்கத் தொடங்கியிருந்தாள். அவரும் 'பேட்டி, பச்சா' என்று அவளிடம் அன்புபாராட்டத் தொடங்கியிருந்தார்.
அவ்வப்போது அனைவரையுமே அழைத்துத் தோட்டத்தில் அமர்ந்து ஒன்றாக கதைபேசி, சிற்றுண்டி அருந்தி, விளையாட்டுகள் புரியவும் தொடங்கியிருந்தாள். முதலில் பயந்து மறுத்தாலும், தாராவின் கெஞ்சல்களுக்கு செவிசாய்த்து, அனைவரும் மாலை வேளைகளில் அவளுக்காக ஒன்றுகூடினர்.
பகல்களில் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும், அங்கே வரும் குருவிகளுடன் கொஞ்சிப் பேசுவதுமாய்ப் பொழுதுகள் கழிய, நண்பகலில் அப்பா ஆலைக்குப் போய்விட்ட பிறகு அழைத்து அம்மாவிடம் பேசிவிட்டு, மதியத்துக்கு மேல் தொலைக்காட்சியோ புத்தகமோ எதிலேனும் லயித்துவிட்டு, மாலைகளில் தான் சேர்த்த நட்புவட்டத்துடன் அளவளாவிட விரைவாள்.
எனவே அவளைப் பொறுத்தவரை கொல்கத்தா வாசம் இனிமையாகவே சென்றுகொண்டிருந்தது.
ஆதித் அவள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளைக் காணும்போதெல்லாம் இயல்பாக ஏதேனும் பேச முற்படுவான். சில நேரங்களில் வீட்டைப் பற்றி விசாரிப்பான், அவனது தம்பியைப் பற்றிக் கேட்பான். அவன் ஒரு கேள்வி கேட்டாலே பத்திப் பத்தியாக அவள் பதில் சொல்வாள் ஆர்வமாக. கவனித்தாலும் கவனியாவிட்டாலும் புன்னகைத்துத் தலையசைக்கக் கற்றுக்கொண்டான் அவனும்.