13

856 55 32
                                    

பர்வதத்தின் செயற்திறனைப் பற்றி அதுவரை ஆதித் முழுதாகத் தெரிந்திருக்கவில்லை என்பது, அன்று நிரூபனமானது. அவர் அழைத்ததும் நள்ளிரவெனவும் பாராமல் குடும்பமாகக் கிளம்பிவரும் சொந்தங்கள், அவர் கேட்ட நொடியில் ஒரு ஜவுளிக் கடையையே அவர் காலடியில் இறக்கிய நண்பர், ஆதித்தின் தேவைகள் அனைத்திற்கும் தயாராக நின்ற சேவகர்கள் என, அனைத்தையும் ஓரிரவில் பார்த்து அயர்ந்துவிட்டான் அவன். இது நின்று நடந்த திருமணமென்று சொன்னால், நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். எத்தனை நாட்கள் பாட்டி இதற்கெல்லாம் திட்டமிட்டாரென யோசிக்காமலிருக்க முடியவில்லை ஆதியால்.

விடிவதற்குள் முக்கிய சொந்தங்களுக்குத் தகவல்கள் சென்றிருக்க, அதில் கிட்டத்தட்ட அனைவரும் அதிகாலையில் ஆஜராகிவிட, சுபயோக சுபதினத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆதி-தாராவின் திருமணம் நடைபெறத் தொடங்கியது.

அடர்சிவப்புக் கரையிட்ட வெண்பட்டுப் புடவையில், கழுத்திலொரு கனமான ரோஜா மாலையுடன், கண்படும் அளவிற்கு சர்வலட்சணமாய் அவள் வந்தபோது, பர்வதம் பூரித்துப்போனார்.

"ஆதித்.. பாருடா என் பேத்தியை.. உன் பொண்டாட்டியை! ஊரு கண்ணெல்லாம் அவ மேலதான் போ!"

அவன் திரும்பிப் பார்த்தபோது, அது உண்மைதானெனத் தோன்றியது. கண்களில் தெரியும் சோகத்தை மட்டும் காண மறந்துவிட்டால், அவள்போல் அழகியை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

அவள் வந்து சோகமே உருவாக மணவறையில் அமர்ந்தபோது, ஆதித்தின் முகமும் அதேயளவு சோகமும் சோர்வும் பிரதிபலித்தது. அவளிடம் மென்மையாக, "நம்ம ப்ளான் கண்டிப்பா வேலை செய்யும்.. நம்பு" என உறுதியளிக்க முயன்றான் அவன். அவளும் சன்னமாகத் தலையாட்டினாள்.

மற்றவர்கள் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். புகைப்படக்காரர் வளைத்து வளைத்து அவர்களை படம்பிடித்துக் கொண்டிருக்க, புரோகிதர் வேறு, 'மந்திரம் சொல்லுங்கோ', 'பூவை இதுல போடுங்கோ', 'தர்ப்பையை கைல எடுங்கோ' என அவனை அதட்டி வேலை வாங்கிக்கொண்டிருக்க, எழுந்து போய்விடலாமென அலறிய மனதை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, என்றேனும் ஓர்நாள் இதற்கெல்லாம் சேர்த்து அவரை நன்றாகப் பழிதீர்க்க மனதுக்குள் தீர்மானித்துவிட்டு, அவர் சொன்னதை செய்தான் அவன்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now