அரைமணி நேரத்தில் வாட்சன் ஸ்ட்ரீட்டில் திரும்பி ஒரு புராதன செங்கல்சுவர் காம்ப்பவுண்ட்டை நெருங்கி, அங்கிருந்த இரும்பு கேட்டின் முன்பு நின்றது கார். தாரா கண்களை மூடித்திறந்து ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தாள் வெளியே. அங்கே கண்ட காட்சியில் அப்படியே மெச்சிப்போய் மெய்மறந்துவிட்டாள் அவள்.
ஏதோ பழைய படங்களில் வரும் இங்கிலாந்துத் துரைமார்களின் வீடுபோல இருந்தது அந்த இல்லம். ஆயிரம் மழைகள் பார்த்துப் பாசிப்பச்சை படர்ந்திருந்த சுவர்கள். அகன்ற சாளரங்கள், மரஜன்னல்கள், அவற்றில் படர்ந்திருந்த க்ரோட்டன் கொடிகள். முன்பக்கம் சிறிய புல்வெளி, நடுவே சின்னதாய் நீரூற்று. வாசற்கதவை அடைய நான்கு மார்பிள் படிகள். வாசலின் இருபுறமும் தடிமனான தூண்கள், சற்றே சரிவான தலைவாயில், அதுவும் நாள்பட்ட நிறத்தில். பழமையில் ஊறியிருந்த தோற்றம் என்றாலும், அதில் கம்பீரமும் அழகும் நிறையவே தெரிந்தன. சுற்றிலும் இருந்த கான்க்ரீட் பெட்டி வீடுகளைப் பார்த்தபோது, இது கலையென்றே தோன்றியது. தாராவின் விழிகளிலும் பிரசன்னம் மின்னியது.
காவலாளி வந்து கேட்டைத் திறந்துவிட்டு சல்யூட் அடிக்க, ஆதித் அளவாகத் தலையை அசைத்து அங்கீகரிக்க, கார் முன்னேறிச் சென்றது உள்ளே. ஓட்டுநர் இறங்கி ஆதிக்குக் கதவைத் திறந்துவிட்டுவிட்டு, தாராவின் பக்கம் வர, அதற்குள் அவளே கதவைத் திறந்து இறங்கினாள்.
"பரவால்ல, தேங்க்ஸ்.."ஓட்டுநர் புன்னகைத்தார்.
அவர் பெட்டிகளை எடுக்கவேண்டி வண்டியின் பின்பக்கம் செல்ல, ஆதித் படியேறி வீட்டினுள் செல்ல, தாரா ஒருகணம் எங்கே செல்லவெனத் தடுமாறி, பின் ஆதியையே பின்தொடர முடிவெடுத்துப் படிக்கட்டுகளில் விரைந்து ஏறினாள்.
வீட்டினுள் நுழைந்தபோது, உயர்ந்த மேற்கூரையை தலைநிமிர்த்திப் பார்த்து வியந்தவாறே உள்ளே நடந்தாள் தாரா. கூடத்தின் அச்சுறுத்தும் பிரம்மாண்டத்தின்முன், தான் மிகவும் குறுகிப்போனதுபோல் உணர்ந்தாள் அவள். அங்காங்கே உயரத்தில் இருந்த ஜன்னல்களையும், கூரையிலிருந்து தொங்கிய சாண்ட்லியர் விளக்கையும் பார்த்துக்கொண்டே அவள் மெல்ல நடந்து வர, ஆதித்தின் வரவறிந்து வீட்டிலிருந்த பணிப்பெண் ஒருவர் பணிவாக வந்துநின்றார். ஆதித் அவரைக்கண்டு தலையசைக்க, அவரைத் பார்த்துத் தயக்கமாகப் புன்னகைத்தாள் தாரா.