இரவு பத்தரை மணி.
கல்கத்தா நகரம் துயிலுக்குச் சென்றிருக்க, நெடுஞ்சாலையில் அந்த ஒற்றை மகிழுந்தைத் தவிர வேறு வாகனங்களில்லை வெகுதூரத்திற்கு.
"மோனே ரேகோ ஆஜ்.. அமார்.. ப்ரேம்.."
பிரதிமா பானர்ஜியின் இன்னிசை இரவில் இருமடங்கு இனிமையைக் கூட்டிட, அதில் ஆழ்ந்து ரசித்தவண்ணம் சாலையில் கண்பதித்துத் காரோட்டிக் கொண்டிருந்தான் ஆதித். இதுபோல தனிமையில் எங்கும் சென்று எத்தனை நாளாகிறது என்று சிந்தித்தவாறே சென்றுகொண்டிருந்தான் அவன்.
பக்கத்து இருக்கையில் பத்து நிமிடத்திற்கு முன் தூங்கிப்போயிருந்தாள் தாரா.
சுமார் பத்து மணிக்கு விருந்தினர் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட, ராஜீவும் ஆதித்தும் உணவக பில்லை சரிபார்த்து செலுத்திவிட்டு வரும்வரை அவளும் கொட்டாவிகளை அடக்கிக்கொண்டு காத்திருந்தாள். ராஜீவ் அவளிடம் வந்து, "பார்ட்டி சுபமா முடிஞ்சுது. உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?" என வினவ, ஆமெனத் தலையசைக்க மட்டும் செய்தாள் அவள்.
"குட் நைட். காலைல சந்திப்போம். ஆஷி?"
"அதுக்கு என்ன பதில் சொல்லணும்னு இன்னும் சொல்லித் தரலை!"
"போயிட்டு வாங்கன்னு சொல்றதுக்கு, 'ஆஷுன்' சொல்லணும்."
"ஓ.. ஆஷுன் ராஜீவ். குட்நைட்."
அவன் கையசைத்துவிட்டுச் செல்ல, அவளை அழைத்துக்கொண்டு காருக்கு வந்தான் ஆதித்.
"வீட்டுக்கு அரைமணி நேரத்துல போயிடலாம். அதுவரை தூங்காம இருக்க முடியுமா?"
தாரா சவாலாகப் பார்த்தாள் அவனை.
"விடிய விடிய முழிச்சிருந்து ப்ளஸ் டூ கணக்குப் பரீட்சைக்குப் படிச்சிட்டு, தூங்காமப் போயி எக்ஸாமும் எழுதிட்டு வந்தேன் நான்! அவ்ளோ சீக்கிரமா தூங்கிட மாட்டேன்"**
அசைவின்றித் தூங்கும் தாராவை நொடிக்கு ஒருதரம் திரும்பிப் பார்த்துக்கொண்டவன், தன்னை மனதுக்குள் அதற்காகத் திட்டிக்கொண்டே வீட்டிற்குச் செலுத்தினான் வண்டியை.