சட்டென வாசலில் பர்வதத்தின் குரல் கேட்கவும் ஆதித் திகைத்துத் திரும்ப, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவர் நின்றார், கண்களில் உறுதியோடு. பின்னால் உஷாவும் மாதவனும்.
ஆதித் பெருமூச்செரிய, நண்பர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தனர்.
"நான் வரும்போது ஏதோ சொல்லிட்டு இருந்தியே கண்ணா.. அதை சொன்னா நானும் கேப்பேன்ல? என்ன காரணம், சொல்லு கேட்போம்."
ஆதித் தயங்க, பாட்டி நிதானமாக வந்து சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.
"என்னையும் ஃப்ரெண்டா நினைச்சுக்க கண்ணா.. ஃப்ரீயா பேசு"அவன் மவுனம் காக்க, உஷாவும் ஊக்குவித்தார்.
"பேசினா தானே தெரியும், உனக்கு என்ன வேணும்னு? தாராளமா பேசு ஆதித்.""Fine!!
மொதல்ல, என் கம்பெனி. பிஸினஸ்ல இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. என்னோட கவனம் முழுக்க முழுக்க கம்பெனிமேல இருந்தா மட்டும்தான் அது நடக்கும்.
அடுத்து, எனக்கு என்னோட சுதந்திரம் ரொம்ப முக்கியம். யாரோ மூணாவது மனுஷங்களுக்காக என்னோட பழக்கங்களை மாத்திக்க என்னால முடியாது.
என்னை யாரும் 'அதை செய், இதை செய்'னு ஆர்டர் போடறதுல எனக்கு இஷ்டமில்ல.
மூணாவது, ஏதோ பேபிசிட்டர் மாதிரி, எப்பப் பார்த்தாலும் எங்க போற, எப்ப வருவ, எப்ப சாப்பிடுவ, எப்ப தூங்குவனு கேள்வியா கேட்டுக்கிட்டே இருக்கறது. நினைச்சாலே எரிச்சல்..!
நான் இப்ப இருக்கறபடியே இனியும் சந்தோஷமா, சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கறேன் நான். ஸோ, எனக்கு இந்த கல்யாணம், கமிட்மெண்ட் எதுவும் வேணாம்."படபடவென அவன் பொரிய, பர்வதத்தின் முகம் களையிழக்க, நகுலும் நரேனும் அசவுகரியமாக நின்றனர்.
"We didn't expect this from you. கல்யாணம்ங்கறது உன்னோட சுதந்திர வாழ்க்கையை பறிக்க நாங்க பண்ற சதி கிடையாது ஆதித். இப்பப் புரியாது.. ஆனா காலம்போன கடைசியில, பேச்சுத் துணைக்காகவாச்சும் யாராவது இருக்கமாட்டாங்களான்னு மனசு ஏங்கும்.. அப்போ புரியும்..."
பாட்டியின் கண்களில் கண்ணீர் பளபளக்க, பெற்றோர் அதிருப்தியாக அவனைப் பார்க்க, ஆதித் சற்றே தலைதாழ்த்தினான்.