"போகவேணாம்னு சொல்லுங்க... ப்ளீஸ்..."
தனது கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியவளை செய்வதறியாது பார்த்தான் ஆதித்.
ஏற்கனவே மனதோடு கிளத்தல் செய்து தாராவிடமிருந்து விலகியே இருக்க முடிவெடுத்து விட்டவனுக்கு, அதை செயல்படுத்து சந்தர்ப்பம் மட்டும் கிடைப்பதில்லை.
நாசூக்காக அவளைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தியவன், "தாரா.. எல்லாருக்கும் அவங்கவங்க வேலைகள் இருக்கு. அதைப் பார்க்க அவங்க போய்த்தானே ஆகணும். எத்தனை நாள் நம்ம கூடவே இருப்பாங்க அவங்க?" என நிதர்சனம் பேச முயன்றான். அவளோ எதையும் காதில் கொள்ளாமல் விசும்பியவண்ணமே பர்வதத்திடம் சென்று அவர் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அவளையும் ஆதித்தையும் பார்த்தவர், "ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க, அதுமட்டும் போதும் எங்களுக்கு. பெரிவங்களுக்கு, ஒரு வயசுக்கு மேல சொத்து சொகமெல்லாம் தேவைப்படாது; அவங்க பிள்ளைங்க நல்லா இருக்கறாங்கன்ற நினைப்பு மட்டும் போதும். அந்த சந்தோஷத்தை மட்டும் எங்களுக்குக் குடுங்க போதும்" என்றார்.
ஆதித் மறைபொருள் புரிந்து இறுக்கமாக நிற்க, தாரா வெறுமே தலையாட்டினாள்.
*****
மாலை ஐந்து மணிக்கு மாதவனையும் உஷாவையும் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தின் போர்டிங் கேட்டில் பிரியாவிடை தந்து கண்ணீர்மல்கக் கையசைத்து வழியனுப்பிய பின்னர், பர்வதம்மாளுக்கும் கோயமுத்தூர் விமானத்தில் பயணச்சீட்டுப் பெற்று அனுப்பி வைத்தபோது, கிட்டத்தட்ட மூச்சிரைக்கத் தொடங்கியிருந்தாள் தாரா.
பர்வதம்மாளை அனுப்ப வேண்டிய கேட் அருகே வந்தபோது, மூச்சுவிடாமல், "அம்மாவை கேட்டதா சொல்லுங்க.. தன்னுவுக்கு ஸ்வீட்டை குடுத்துடுங்க.. தன்னுவை நல்லா படிக்க சொல்லுங்க.. தன்னுவுக்கு லீவு இருந்தா அவனை அடுத்தமுறை கூட்டிட்டு வாங்க.. தன்னுவையும் அம்மாவையும் பார்த்துக்கங்க.." என்றெல்லாம் அழுகையினூடே சொல்லிக்கொண்டு வர, அவரும் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டார் தலையசைத்து.