சோர்ந்துபோய் அமர்ந்திருந்த தாராவிற்கு அவனது குரல் தேவகானமாய் ஒலித்திட, தாயைக் காணாது தவித்த கன்றாய் எழுந்து அவனிடம் ஓடினாள் அவள். அவனோ, அருகில் நின்ற மனிதருக்கு அவளை அறிமுகம் செய்தான் சலனமே இல்லாமல்.
"இது கொல்கத்தா சிட்டி கமிஷ்னர். சார், இது என் வைஃப் சிதாரா சீனிவாசன்"
கலங்கியிருந்த கண்களை அவசரமாகப் புறங்கையால் துடைத்துக்கொண்டு, சீருடையில் நின்ற அந்த நடுத்தர வயது மனிதரை நோக்கி சன்னமாகப் புன்னகைத்தவாறு கைகூப்பினாள் தாரா.
"வணக்கம் சார்"அவரும் பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு, ஆதித்திடம் பெங்காலியில் ஏதோ கூற, ஆதித் சிரித்து நன்றி சொன்னான்.
அவரை அமரச் செய்துவிட்டு தாராவிடம் திரும்பியவன், அவள் மெலிதாக விசும்பியபடி கண்ணீரைத் துடைப்பதைப் பார்த்துவிட்டான்.
லேசாக அவள்புறம் குனிந்து, "என்னாச்சு?" என்றிட, அவள் திகைத்தவளாய் நிமிர்ந்து மீண்டும் சட்டெனக் குனிந்துகொண்டாள்.
"ஒண்ணுமில்லயே.."ஆதித்திற்கு என்னவோ போல் இருந்தது. தான் வற்புறுத்தி அழைத்ததால்—விருப்பமின்றி வந்ததால்—இங்கிருக்கப் பிடிக்காமல் துவள்வதாகப் புரிந்துகொண்டவன், இதழ்களை இறுக்கினான் அதிருப்தியாக.
"இன்னும் ஒருமணி நேரம் தான். அதுவரை பொறுத்துக்க."
"ஹ்ம்ம்"
தூரத்தில் நின்ற ராஜீவை கைகாட்டி அழைத்தான் அவன். அவனும் ஓடி வந்தான் அவசரமாக. "என்னாச்சு சார்? என்ன வேணும்?"
"கொஞ்சம் தாராவுக்கு கம்பெனி குடு. எதாவது வேணும்னு கேட்டா செய்" என பெங்காலியில் சொல்லிவிட்டு, தனது நிறுவன நிர்வாகிகளை கவனிக்க விரைந்தான் ஆதித் நிவேதன், தனதருகே நின்ற தாராவைத் திரும்பிக்கூட பார்ககாமல்.
தாரா துவண்ட முகத்துடன் ராஜீவைப் பார்க்க, அவனோ பற்களைக் கடித்துக் காற்றை உள்ளிழுத்தான் விளையாட்டுப் பரிதாபத்துடன்.