உற்சாகமாக வீட்டினுள் நுழைந்தவனை பர்வதம், மாதவன், உஷா என மூவருமே கேள்வியாக ஏறிட்டனர்.
"என்னடா, எந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தது உனக்கு?"
"எனக்கு மூணு பொண்ணையும் தான் பிடிச்சிருந்தது பாட்டி... ஆனா அவங்களுக்குத் தான் ஏனோ என்னைப் பிடிக்கல!"
வார்த்தையில் தன் விஷமத்தனத்தை மறைக்கச் சிரமப்பட்டவாறே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான் ஆதித்."என்னடா கண்ணா சொல்ற?? உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்களா!?"
உதட்டைப் பிதுக்கி, சோகமாகத் தலையை சரித்தான் அவன்.
"என்ன பண்றது பாட்டி... அவங்க முடிவு அதுதான், நான் என்ன பண்ண முடியும், சொல்லுங்க?"உஷா கண்களைச் சுருக்கி சந்தேகமாகப் பார்த்தார் அவனை.
"ஆதித்... என்ன பண்ணின நீ?""வாட்!? மாம், அவங்க பிடிக்கலைன்னு சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன்?"
"நீதான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியே? அப்போ அவங்க பிடிக்கலைன்னு சொன்னா, நீ ஹேப்பியா தானே இருக்கணும்?? ஏன் இப்ப மட்டும் சோகமா இருக்க?"
அவர் குறுக்கு விசாரணை செய்து தன் குட்டை உடைக்குமுன் அவசரமாகப் படியேறியவன், "டையர்டா இருக்கு மாம். நான் தூங்கப்போறேன்" என்றுவிட்டு அறைக்குள் சென்று கதவடைத்தான்.
நேரம் போவது தெரியாமல் தனது நிறுவனத் தரவுகளை மடிக்கணினியில் பார்ப்பதும், குறிப்பேட்டில் எதையோ எழுதுவதும், பின் மின்னஞ்சலில் மேலாளர்களுக்கு ஆணைகள் அனுப்புவதுமாக இருந்தவன், கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த நகுலைக் கவனிக்கவில்லை.
"என்ன மச்சான், கோயமுத்தூருக்குள்ள எந்தப் பொண்ணும் உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குதாமே..? எதாவது ரிவர்ஸ் மலையாள மாந்திரீகமா?" என்றவாறே உள்ளே வந்தான் அவன்.
அதைக்கேட்டுப் பாதிச் சிரிப்போடு நிமிர்ந்த நிவேதன், குறும்பாகக் கண்ணடித்தான். "அப்படித்தான் வச்சுக்கோயேன்!!"