மணி 7 ஆகிடுச்சி எழுந்திருடி என்ற அன்னையின் காலை அர்ச்சனையை அலட்சியம் செய்து தலையணையை இழுத்து அணைத்தவாறே புரண்டு படுத்தாள் மதுரா என்றழைக்கப்படும் மதுரபாஷினி....
ஏய் தூங்கு மூஞ்சி எழுந்திரிடி எப்பயும் தூங்கிட்டே என்ற தன் அக்காளின் சுப்ரபாதத்திற்க்கு பதில் பாட்டு பாடியவாறே எழுந்து அமர்ந்தாள் மதுரா...
பல் துலக்கி, முகம் கழுவி துடைத்தவாறே ஒருநாள் தானம்மா எனக்கு லீவ் அந்த ஒருநாள் கூட நான் தூங்க கூடாதா.. நம்ம வீட்லதான் தூங்க முடியும்? என்று கேட்டவாறே அன்னை வைத்த தேநீரை கோப்பையில் ஊற்றினாள். காலை வேலையில் சில்லென்ற பனிக்காற்றும் சுடச்சுட தேனீரும் மதுராவின் பிடித்தமான ஒன்று. எவ்வளவு பிடித்தம் என்றாலும் ஒரு கோப்பைக்கு மேல் அருந்தியது இல்லை. தேநீர் மட்டுமல்ல மதுராவின் விருப்பமான எல்லாவற்றிலுமே அளவுடனே இருப்பாள்.. ஆனால் ஒன்றைத் தவிர..! காதல்..♥♥
மதுரா... முதுகளை முடித்த 23 வயது நிரம்ப போகும் நடுத்தர வர்கத்தை சேர்ந்த ஒருபெண். 23 வயது என்று அவள் கூறினால் மட்டுமே வெளிவரக்கூடிய உண்மை. முன்பின் அறியாதவர்கள் மதுராவைக் கண்டால் எந்த வகுப்பு படிக்கிறாய் என்று கேட்கும் அளவிற்க்கு உடல் எடையையும் அளவையும் வைத்திருப்பாள். மாநிறம் வட்ட முகம், வரிசையான பற்கள், அளவான கருமையான கூந்தல் என அனைத்தும் கனக்கச்சிதம். பெயரைப் போலவே பேச்சும் மதுரம் தான். வெளியில் வெகு சாதுவாய் தெரியும் மதுரா வீட்டிலும் அவள் நண்பர்களிடத்திலும் படு சுட்டி, ராட்சஸி....
அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதே என்ற பரபரப்பில் இரண்டே இரண்டு இட்லியை நான்காய் பிட்டு விழுங்கிவிட்டு மதிய உணவை மறந்துவிட்டு பறந்தாள், காலையில் ஆரம்பித்த பரபரப்பு நாள் முழுவதும் தொடரப்போவதை அறியாமல்.. அலுவலகத்தில் அவள் வரும் முன்னே அவளுக்கான வேலை வந்து சேர்ந்திருந்தது....
மதுரா வேலை செய்வது ஒரு விவசாய துறை சார்ந்த கம்பெனி. அங்கு அந்த நிறுவனத்தின் மூலம் விதைகளை பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளின் தகவல்களையும் அவர்கள் பயிரிடும் பயிரின் குறிப்புகளையும், வெள்ளாமை முடிந்து வரப் போகும் விதைகளின் அளவையும் கணினியில் சேமித்து தேவைப்படும் போது அவளின் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கொடுப்பதே அந்த நிறுவனத்தில் அவளுக்கான பணியாகும். கடந்த 6 மாதங்களாக மட்டுமே மதுரா இங்கு பணியாற்றி வருகிறாள். வேலை என்னவோ பிடித்தமானதாக தான் இருந்தது, ஆனால் சக பணியாளர்கள் தான் இன்னமும் அவளுக்கு செட் ஆகவில்லை. அதனாலோ என்னவோ அந்த அலுவலகம் செல்வது சிறு வயதில் பள்ளி சென்றதை விட கடினம் அவளுக்கு.
பள்ளி பருவத்தை அரசு பள்ளியில் முடித்தாள், கல்லூரி பருவத்தை திருச்சியைச் சேர்ந்த அரசின் உதவி பெறும் ஒரு தனியார் கல்லூரியிலும் கல்லூரி விடுதியிலும் கழித்தாள், இராமனின் வனவாசத்தைப் போல 5 ஆண்டுகள் விடுதிவாசம் முடிந்து இப்பொழுது வீட்டிலிருந்தே அலுவலகம் செல்கிறாள். நிறுவனத்தின் வாகனமே அழைத்துச் சென்று திரும்பவும் வீட்டின் அருகிலே வந்து விட்டுவிடும். பெரிதாக சிரமமும் இல்லை அவளுக்கு. மதுராவின் தந்தை ஒரு ஜோதிடர். தாய் உலகில் பெண்களுக்கு அழகு எனக் கூறப்படும் அத்துனை நற்குணங்களையும் பெற்று அதையே தன் இரு பெண்களுக்கும் போதிப்பதையே வேலையாக பார்ப்பவர். மதுராவின் அக்கா மதிவதனி எம்.சி.எ முடித்து ஒரு ஊடகத்தில் பணிபுரியும் பெண். பெயருக்குத் தான் மூத்தவள் ஆனால் கள்ளம் கபடம் அறியாமல் வளர்ந்த ஒரு குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். நிலவினைப் போல ஜொலித்ததால் அந்த பெயர் வைத்தார்களோ என்னவோ என்று யோசிக்கத் தூண்டும் அழகு. இவர்களின் தம்பி பிரபு அனைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வரும் 10ம் வகுப்பு படிக்கும் குட்டி வாண்டு...
தம்பியை தானே படிக்க வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் வேலைக்குச் செல்லும் மதுராவிற்க்கு பிடிக்காத இடமும் பழகிவிட்டது. வேலைப்பளு எவ்வளவு அதிகமான போதும் புன்னகையை சிந்திச் செல்ல மறந்தது இல்லை. இன்றும் அப்படிதான் தினசரியை விட அதிகபடியான வேலை. அலுவலகத்தில் அவள் அறையில் இருவர் மட்டுமே எப்போதும் இருப்பர். வேலையை சொல்வதற்கோ அல்லது தகவல் அறிக்கையை கேட்டு களப்பணியாளர்கள் வந்தால் மட்டுமே 4 அல்லது 5 ஆகும் எண்ணிக்கை. இன்றும் அறிக்கையை கேட்டும் இந்த வேலையை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் ஆட்கள் வந்திருந்தார்கள். காலையில் ஆரம்பித்த பரபரப்பு இன்னமும் குறையாமல் வேலையைச் செய்தாள். அலுவலகம் முடியும் நேரம் நெருங்கியும் அவள் வேளைப் பளு குறையாமல் இருந்தது. ஒருநாளைக்கு எண்ணூறுக்கு குறையாமல் போட வேண்டிய என்ட்ரி இன்று நானூறை தாண்டாமல் இருப்பது வேறு அவள் வயிற்றில் புளியைக் கறைத்தது. அலுவலக பேருந்தை விட்டு தனியார் பேருந்திலும் அவள் சென்றது இல்லை. அப்படி செல்ல அவள் வீட்டிலும் அனுமதி அளிக்கப்படவில்லை. எல்லாம் அவளுக்கு அவளே செய்து கொண்ட வினை என்று தான் சொல்ல வேண்டும். மணி 6.15 ஐ தொட்டு இருந்தது. இனியும் தாமதித்தால் பேருந்தை விட்டுவிடக் கூடும் என்று கணினியை அனைத்து விட்டு கிளம்பினாள். கிளம்பும் நேரத்தில் எரிச்சலைக் கிளப்பும் வண்ணமாய் இன்று என்ன 400 என்ட்ரி தானா என்று இழுத்த சக பணியாளரைப் பார்த்து முறைத்துவிட்டு பார்த்துட்டு தானே இருந்தீங்க நான் ஒன்னும் சும்மா உட்கார்ந்துட்டு இல்லையே மற்ற வேலைகளையும் செய்துவிட்டு தானே செய்தேன் என்று கேட்டுவிட்டு மணியை பார்த்தவள் பதரியே போனாள். 6.25 ஐ தொட்டு இருந்தது. 6.30 க்கெலாம் வண்டி வந்துவிடும். வாதத்தை வளர்க்க விரும்பாமல் நாளை முடித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு அவசர அவசரமாக கிளம்பினாள். அவள் அறையிலிருந்து சாலைக்கு வரவே 5 நிமிடங்கள் ஆகும். எனவே நிமிடமும் தாமதிக்காமல் படு வேகமாக நடந்தாள். பஸ் நிறுத்தத்திற்க்கு வரவும் பஸ் வரவும் சரியாக இருந்தது. மதுராவின் எரிச்சலுக்கேற்ப பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்காமல் நிற்க வேண்டியதாய் இருந்தது. இரண்டு முறை வண்டியின் வேகத்தில் தடுமாறிப் போனாள், ஜெட் ஓட்டுவதாய் நினைப்பு என்று சலித்துக் கொண்டே வந்தாள். 20 நிமிடத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்க்கு வந்துவிடுவாள், ஆனால் அந்த 20 நிமிடமும் நின்று வந்தால் மதுரா விழுந்து வாரிக் கொண்டுதான் வருவாள், ஏனெனில் பிரயாணம் அவளுக்கு பழக்கப்படாத பிடிக்காத ஒன்று. அவள் வீட்டிலும் வெளியில் செல்வதென்றால் காரிலும், இரு சக்கர வாகனத்திலும் அழைத்துச் சென்று பழக்கிவிட்டார்கள். பஸ் பிரயாணம் என்றாலும் கூட கூட்டம் இல்லாத பஸ்ஸாக பார்த்தே அழைத்துச் செல்வார்கள். ஒரு வழியாக புலம்பியபடியே வீடு வந்து சேர்ந்தாள். வந்ததும் கை கால் முகம் கழுவிவிட்டு தான் அடுத்த வேலையைப் பார்பாள். வேலை எதுவும் இல்லை என்ற பட்சத்தில் டிவி அவள் பொழுது போக்கு. இதை தவிர சமைப்பது படம் வரைவது பாடுவது என பல கலைகளில் கைதேர்ந்தவள் மதுரா.கவிதை எழுதுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும், எவையெல்லாம் அவளுக்கு பிடித்தமாக தோன்றுகிறதோ அவைகளை எல்லாம் கவிதைகளாய் மாற்றிவிடுவாள். சில நேரங்களில் தனிமையை கூட ரசித்துவிடுவாள். தனிமையை விட அழகான நேரம் இருந்துவிட வாய்ப்பில்லை என்று பேசுவாள்.
இப்படித்தான் மதுராவின் நாட்கள் எறும்பாய் ஊறிக்கொண்டிருந்தது.6 மாதம் 2 வருடங்களாய் ஓடிப் போனது. இன்னும் சில தினங்களில் மதிவதனியின் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண வேலைக்காக மதுரா அலுவலகத்தில் 10 நாட்கள் விடுப்பு கேட்க அவளின் பொது மேலாளர் தர மறுக்கவே நான் பணி விலக்கம் செய்கிறேன் என்று வீராப்பாய் பேசிவிட்டாள். மனதினுள் சிறு தயக்கம் இருந்தாலும் இந்த வேலையை விட இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
திருமண ஏற்பாடுகள் அமர்களமாய் நடக்க பம்பரமாய் சுழன்று வேலை செய்தாள். தன் ஆசை அக்காளின் திருமணம் ஆயிற்றே விட்டுவிடுவாளா என்ன? அக்காவை அலங்கரிப்பது விதவிதமாக போட்டோ எடுப்பது என ஒரே களேபரமாக்கி கொண்டிருந்தாள். அவளின் சித்தி சித்தப்பா, சித்தி பசங்க, மாமா, அத்தை, அத்தை பசங்க பாட்டி தாத்தா என வீடே நிறைந்து இருந்தது. மதுராவிடம் உன் குடும்பத்தில் எத்தனை பேர் என கேட்டால் இவர்கள் அனைவரையும் சொல்லிவிட்டு தான் வாயை மூடுவாள் அவ்வளவு பிரியம் ஒருவருக்கொருவர். மதுராவின் சித்தி பெண்ணும் அவளும் சேர்ந்து இந்த ஒருவாரமாய் மதிவதனியை ஒருவழி பன்னிவிட்டார்கள். திருமணம் நல்லபடியாய் முடிந்து கண்ணீரும் ஆனந்தமுமாக அடுத்த ஒரு வாரமும் ஓடியது.
இப்போது வேலை...
அடுத்து வேலைக்கு என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் விழித்தாள். இணையதளத்திலும் அதற்கான பதிவுகளை தேடிக்கொண்டுதான் இருந்தாள். அவள் வசிக்கும் ஊரிலிருந்து 1 மணிநேர பயண இடைவெளியில் அந்த ஊரின் மாநகராட்சி அமைந்துள்ளது. அங்கு நிறைய நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவையெல்லாம் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனமாக அல்லது சிறு நிறுவனங்களாக இருந்தன. ஆகையால் மதுராவிற்க்கு அங்கு செல்ல ஒரு தயக்கமும் இருந்தது. வீட்டின் சூழ்நிலை திருமண செலவு என்று எதுவும் அவளை யோசிக்க விடாமல் அங்கு வேலையில் சேர வைத்தது.
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....