இரவு ஏழு ஆகிவிட்டது மதுரா வீடு வந்து சேர்வதற்க்கு. வரும்போதே மதுராவின் அம்மா சமைக்கும் வாசனை தெருவரை வந்து மூக்கைத் துளைத்தது. பசியும் வயிற்றைக் கிள்ள தொடங்கியது. வீட்டில் நுழைந்ததுமே தக்காளி சாதமா என்று கேட்டுக்கொண்டே நுழைந்தாள். மதுராவின் தந்தை உன் செல்ல பொண்ணு வந்துட்டா.... நுழையறப்பவே மோப்பம் பிடிக்றதை பாரு என்றார் கிண்டலாக..
ஆமா அப்பா சோறு தான முக்கியம் என்று வேண்டுமென்றே மறுபடியும் மூச்சை இழுத்துவிட்டு ஆஹா என்ன வாசனை ம்ம்ம்...... என்று இழுத்தாள்... அம்மா தாமதிக்காமல் சாப்பாடு எடுத்துவை நான் இரண்டே நிமிடத்தில் கை, கால், முகம் அலம்பிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
சொல்லியபடியே இரண்டு நிமிடத்தில் ஓடோடி வந்தாள். அதற்குள் அவள் அம்மாவும் தயாராய் எடுத்து வைக்க கமகம வாசனையுடன் ஆவி பரக்க சுடச்சுட சாப்பிட்டால் சொல்லவா வேண்டும் அவளை அறியாமல் இரண்டாவது தட்டுச் சாப்பாடும் மடமடவென்று உள் இறங்கியது. பொதுவாகவே மதுராவின் தாயார் சமையலில் கை தேர்ந்தவர். அதிலும் மகளுக்கு பிடித்தமானதை சமைக்க வேண்டும் என்றால் அவ்ளோதான், அவரை மிஞ்சிவிட ஆளில்லை சமையலில்.உண்ட மயக்கம் என்பதை போல 9 மணிக்கெல்லாம் உறங்கச் சென்றாள். மனசெல்லாம் நிறைந்ததை போல உணர்ந்தாள். நல்ல வேலை கிடைத்ததை போல ஒரு உணர்வு, மாதச் சம்பளம் 20000, வயிறு நிறைய சாப்பாடு இன்றைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் என்றிருந்தது அவளுக்கு.
நிம்மதியான உறக்கமும் வந்தது.
அடுத்த நாள் எழுந்ததும் ஒருவித பரவசம். அலுவலகம் செல்ல ஆவலாக இருந்தது. ஏன் என்று யோசித்தால் எதுவாக இருந்தால் என்ன பழைய அலுவலகம் போல பிடிக்காமல் போகவில்லையே என்று சிரித்துக் கொண்டாள். இன்னொரு புறம் மயூரா சொன்ன சிடுமூஞ்சி வார்த்தை நினைவிற்க்கு வர லேசாக பயமும் எட்டிப் பார்த்தது. நடப்பது நடக்கட்டும் என்று தீர்மானமாய் இருந்தாள். தலை குளித்து லாவண்டர் நிற சுடிதாரை அணிந்தாள். அது அவள் அம்மாவின் தேர்வு. அவளுக்கென்றே உருவாக்கியதைப் போல இருக்க அதை கனக் கச்சிதமாய் தைத்தும் இருந்தார் அந்த டைலர். கூந்தலை தளர பின்னிக் கொண்டு அதில் ஒற்றை ரோஜாவையும் வைத்தாள். மதுரா எப்பொழுதும் அலங்காரத்திற்க்கு நேரம் ஒதுக்கி மெனெக்கெட மாட்டாள். சிறிது பவுடர் சின்னதாய் ஒரு பொட்டு வட்டமோ அல்லது கூம்பு வடிவமோ கண் முன் இருப்பதை வைத்துக் கொள்வாள். பின் கடவுளை வணங்கி சின்ன கீறலாய் குங்குமத்தில் ஒரு கோடு. அவ்வளவு தான் இதை செய்ய 5 நிமிடத்திற்க்கு மேல் எடுத்துக் கொண்டதே இல்லை. இன்றும் இப்படிதான் கிளம்பினாள் ஆனால் ரொம்ப அலங்காரம் செய்துவிட்டோமோ என்று தோன்ற அம்மாவிடம் ஓடிச் சென்று நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டாள்.
உனக்கென்னடி ராணி மாதிரி இருக்க என்று செல்லங்கொஞ்ச, அய்யோ அம்மா அதை கேக்கலை நான் இன்னிக்கு எப்படி இருக்கேன் ரொம்ம மேக்கப் செய்திருக்கேனா என்று கேட்டாள்.
அதெல்லாம் இல்லமா என் பொண்ணு எப்பவுமே சிம்பிள் தான், யாராவது கிண்டல் பண்ணா சொல்லுடா அப்பா அவங்க தோலை உருவிடறேன் என்று அப்பா சொல்ல, அவள் அம்மா இவ்வளவு நாள் உருவியதே போதும் முதல்ல வந்து கீரையை உருவுங்கள் என்று கிண்டல் செய்ய, ச்சே உங்ககிட்ட வந்து கேட்டேன் பாருங்க நானே பார்த்துக் கொள்கிறேன் என்று தன் அறைக்கே மறுபடியும் சென்றாள். ஒன்றுக்கு இரண்டு முறை கண்ணாடி பார்த்துவிட்டு காலை சிற்றுண்டிக்காக சமையலறைக்கு வந்தாள். அதற்குள் அவள் அம்மாவும் சமையலை முடித்துவிட்டு மதுராவிற்க்கு மதிய உணவை பாக்ஸில் போட்டுக் கொண்டிருந்தாள். மதுரா வந்ததும் 4 இட்லியை தட்டில் வைத்து சட்னி சாம்பாரை ஊற்றிக் கொடுத்தாள். அவள் அம்மா செய்யும் இட்லி சட்னி சாம்பாருக்கு அவள் தந்தையும், தம்பியும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு ருசி. ஆனாலும் மதுரா மட்டும் மூன்று இட்லி தான். அதற்கு மேல் அவளுக்கு உள் இறங்காது.
இன்னும் ஒன்னு சாப்பிட்டால் தான் என்னடி என்று அவள் அம்மா கத்த , அட போம்மா என்னையும் சாப்பிட்டு சாப்பிட்டு உன்னை மாதிரி ஆக சொல்றியா என்று அவள் பதில் பேச, ஆமாம் நீ அப்டியே குண்டாகிட்டாலும்... என்று அவள் அம்மா இழுக்க, மதுரா காதிலே விழாதவள் போல நான் கிளம்புகிறேன் டாடா, டேய் மொட்டை நான் கிளம்பறேன் டாடா என்று கூற, பிரபுவும் கருவாச்சி கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என நக்கலாய் விடை கொடுத்தான். மொட்டை என்று பிரபுவை அழைப்பதே மதுராவின் வழக்கம். சிரித்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் வீட்டிற்க்கு அருகிலேயே பஸ்டேன்ட் என்பதால் அவளுக்கு இருக்கை கிடைத்தது. ஆனால் அலுவலக நேரம் என்பதால் சிறிது நேரத்திலேயே கூட்டம் அதிகமானது. மெலடியான பாடல்களை ஓட விட்டபடியே பேருந்து செல்ல அதை ரசித்துக் கொண்டே மதுரா வந்து சேர்ந்தாள்.
அலுவலகம் நுழையும் போதே அலங்காரம் செய்யப் பட்டிருந்த பூக்களின் வாசனை ஆளை மயக்கியது. உற்சாகம் பொங்க உள்ளே நுழைந்தவள் க்ரித்திக்கின் கோபமான குரலை கேட்டு திடுக்கிட்டாள்....
YOU ARE READING
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
Romanceமதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....