15. நீ நான் நாம்

67 7 56
                                    

💞 வானமாய் நீ
வண்ணமாய் நான்
நாம் வானவில்லாவது எப்போது?

வானவில்லாய் நீ
வான் முகிலாய் நான்
நாம் மழையாவது எப்போது?

மழையாய் நீ
துளியாய் நான்
நாம் பொழிவது எப்போது?

தூறலாய் நீ
சாரலாய் நான்
நாம் நிலம் சேர்வது எப்போது?

விதையாய் நீ
உரமாய் நான்
நாம் மரமாவது எப்போது?

மரமாய் நீ
மலராய் நான்
நாம் கனியாவது எப்போது?

காற்றாய் நீ
ஒலியாய் நான்
நாம் இசையாவது எப்போது?

படகாய் நீ
துடுப்பாய் நான்
நாம் ஓடம் போவது எப்போது?

கடலாய் நீ
அலையாய் நான்
நாம் கரை சேர்வது எப்போது?

கண்ணாடியாய் நீ
விம்பமாய் நான்
நாம் உருவமாவது எப்போது?

உளியாய் நீ
கல்லாய் நான்
நாம் சிற்பமாவது எப்போது?

சுவராய் நீ
தூரிகையாய் நான்
நாம் சித்திரமாவது எப்போது?

மெழுகாய் நீ
திரியாய் நான்
நாம் எரிவது எப்போது?

நெருப்பாய் நீ
அனலாய் நான்
நாம் பற்றிக் கொள்வது எப்போது?

உவமையாய் நீ
உருவகமாய் நான்
நாம் வர்ணனையாவது எப்போது?

எழுத்தாய் நீ
கருத்தாய் நான்
நாம் கவிதையாவது எப்போது?

வலமாய் நீ
இடமாய் நான்
நாம் கால் தடமாவது எப்போது?

கருவிழியாய் நீ
கண்மணியாய் நான்
நாம் விழியாவது எப்போது?

விழியாய் நீ
ஒளியாய் நான்
நாம் காட்சியாவது எப்போது?

இதழாய் நீ
சத்தமாய் நான்
நாம் முத்தமாவது எப்போது?

தனியாய் நீ
துணையாய் நான்
நாம் இணைவது எப்போது?

இணையாய் நீ
இலக்காய் நான்
நாம் வாழ்க்கையாவது எப்போது?

உடலாய் நீ
உணர்வாய் நான்
நாம் உயிராவது எப்போது?

உயிராய் நீ
கருவாய் நான்
நாம் பிறப்பது எப்போது?

பாதையாய் நீ
பயணமாய் நான்
நாம் பயணமாவது எப்போது?

பாதியாய் நீ
மீதியாய் நான்
நாம் முழுமை பெறுவது எப்போது?

தொடக்கமாய் நீ
தொடர்கிறேன் நான்
நாம் முற்று பெறுவது எப்போது?

நானாய் நீ
நீயாய் நான்
நாம் நாமாவது எப்போது?

இப்படிக்கு,
நீ நான் 🥰
நாமாக காத்திருக்கிறேன்.... 😉

நிலா ரசிகன் 😊

அவளும் நானும்Where stories live. Discover now