மேக்க மல ஓரத்துல,
ராசவாய்க்காக் கரையில,
ராசாத்தி வோன் வூடு !
ஆனக்காடு !
அது அத்துவானக்காடு !
ஓலக் குடிசையில,
ஒத்தயில நீ இல்ல !
பூட்டுனா, திறக்காத தகரப்பெட்டி ஒன்னு,
கண் சிமிட்டும் சிமில் விளக்கொன்னு,
பல்லு போன பாயொன்னு,
தலைக்கி வைக்க அந்துபோன, மூட்டையொன்னு,
வெக்கத்துல நெளிஞ்சு நிக்குற அலுமினிய தட்டொன்னு,
தட்டு முட்டுச் சாமான் நாலு,
வாசக் கூட்ட பரிதாபமா ஒரு சீமாரு,
என்னைய யாரச்சும் காப்பந்துங்கனு
காவல் நாயொன்னு,
வானமா நானனு வளந்து நிக்குர பெரிய மரமொன்னு,
உச்சியில இருவாச்சிக் கூடொன்னு,
வெளிய, ஆணொன்னு உள்ள
பேடையொன்னு முட்ட ரெண்டு,
காத்துல குயில் பாட,
கானமயில் அதிலாட,
சில்லுனு சாரலடிக்க,
ஒத்தயடிக்கால் நடந்து
பூலுவபட்டிச் சந்தையில !
ஆலமயக்குர மனம் பாத்து,
ஈரம் வத்துன காய்ச்சல் பாத்து,
வாங்கிவந்த, நெத்திலிக்கருவாட்டுச்
சிலாம்பெடுத்து வெந்தண்ணி அலசலசி,
குளுந்தண்ணி அலசல்ல உப்புக்குப்ப நீக்கி
ராசத்தி சமைக்கப்போறா !
செவ்வான சாயலுல செம்மண்ணு அடுப்புகூட்டி,
தென்னங்கங்கு வச்சு,
கொய்யாச்சிமுறு மூட்டி,
அடுப்பப்பத்தவச்சா அழகியவ கையால,
இவ அழகுல வாய் பொலந்த வாய்ச்சட்டிக் காயவச்சு,
போதும் போதுமுன்னு கல்லெண்ண அதிலூத்தி ,
தோழுரிச்சு அழுகவச்ச,
இரு ஒத்தக்கை சின்னவெங்காயம்,
கண்ணளவுல குருமிளகு,
சின்னதா சிறு சீரகம்,
வக்கனைக்கு வரமொழகா,
பொறி பொறிக்க கருவேப்பில,
அரச்சுவச்ச மஞ்ச தூளு,
ஒடச்சுவச்ச தேங்காச்சில்லு,
சேத்து வணக்கி ,
இறக்கி வச்சா !
வாசனையில் வாயூரும் !
மனசெல்லாம் மானொடும் !
இறக்கிவச்ச சேர்க்கையத,
குத்துன ஆட்டுக்கல்லுல
பைய அதப்போட்டு
மைய ஆட்டாட்டி !
அத எடுத்து கரச்சு வச்சா ,
வனத்து சாமியெல்லாம் !
வருவாங்க அரச்சமயலுக்கே !
தென்னமநல்லூர் கொசவன்கிட்ட,
வாய்ச்சண்ட போட்டு
வாங்கி வந்த சட்டியெடுத்து,
அலுங்காம அடுப்பேத்தி,
அரச்ச அரப்போட, அரச்சொம்பு
தண்ணிவிட்டு,
கொதி கொதினு கொதிக்க விட்டா ,
ஊர்க்கண்ணு வந்து சேறும் !
வாசனையில வானமே நெறஞ்சுபோகும்!
சண்டையில்லாம வெட்டுன கத்திரிக்கா நாலு,
வாத்தியாரில்லாம தோலுரிச்ச உருளக்கிழங்கொன்னு,
சிறுபேச்சுப் பேசிவந்த மொச்சக் கையளவு அதில் சேத்து,
காய்வெந்த நேரத்துல,
கலுவி வச்ச கருவாடு,
உப்பு புளிதண்ணி சேத்து,
இளகா இறக்கி வச்சா !வீடு மனக்கும் !
காடு மனக்கும் !கருவாடும் மீனாகும் !
மீனுக்கும் ஆச வரும் !