தன் உயிரைவிட அதிகமாய் நேசிக்கும் கதிருக்கு தன்னால் உண்டான அவப்பெயரைப் போக்க.. தானே அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாலும்... எழிலின் மனம் ஏனோ அன்றைய நாளில் அம்மாவுடன் ஜாதகம் பார்க்க போனதை நினைத்து கவலையில் உழன்றது.
'அன்னைக்கு மட்டும் நான் போகாம இருந்துருந்தா.. இன்னைக்கு என் கதிர் கூட சந்தோசமா அவனோட காதலை முழுசா அனுபவிச்சு இருந்திருப்பேன்.. மனசு முழுக்க காதல் இருந்தும் அதை வெளிக்காட்டிக்க முடியாத நிலைமை... இப்படி ஒரு நிலை எனக்கு வர நான் என்ன பாவம் பண்ணேனோ...' என மனதிற்குள்ளே அழுது புலம்பினாள்.
உறவாய் வர எண்ணிய
உனை என் உயிருக்குள்
உருக்கி ஊற்ற நினைத்தேன் !
உள்ளம் உனை நினைத்தாலே
உன்னுயிர் எனை நீங்குமென
உணர்வுகள் சொல்ல நானும்
உயிரற்றுப் போனேன் - சத்தமின்றி
உனை வில(க்)கத் துணிந்தேன் !
உதிரம் சிந்தும் உள்ளத்தோடு
உனை நீங்கமுடியாது தவிக்கும்
உயிரை என்செய்வேன் நானும் !கதிரை முதன்முதலாக பார்த்தபோது சண்டையிட்டாலும், அதன்பின் அவனின் நற்குணங்களாலும் அக்கறையான பேச்சுகளாலும் கவரப்பட்டவள் அவனை விரும்பத் தொடங்கினாள் அவளையறியாமலே.
தங்களின் முதல் சண்டையை தனிமையில் நினைத்துவிட்டால் எழிலழகியின் முகம் அந்திவானமாய் சிவந்துபோகும்....
தன் மனம் நிறைத்த கள்வனுடனே தன் வாழ்க்கை நிச்சயம் செய்யப்பட போவதை எண்ணி பெண்ணவளின் உள்ளம் பூரித்து போனாலும், அன்று ஜோதிடர்கள் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் அசரிரீயாக ஒலித்துக் கொண்டே இருந்தது.
காதல் கைகூடிய மகிழ்வை விடவும் தன்னுயிரானவன் உயிருடன் இருப்பதே முக்கியம் என்று முடிவெடுத்தவள் மிகவும் பிரயத்தனப்பட்டு அவனை பிடிக்காத மாதிரி நடிக்க பெரும்பாடுபட்டாள் எழிலழகி.
கதிருடனான திருமணத்தை நிறுத்த வேறு காரணத்தை, அவளால் கூறியிருக்க முடியும். ஆனால் தன்னவனுக்கும் தன் மேல் அளவுகடந்த காதல் இருப்பதால் அவ்வளவு எளிதில் தன்னை நீங்கமாட்டான் என்றெண்ணியே இப்படி ஒரு பழியை போட்டு தன்னை வெறுக்கும்படி செய்ய நினைத்தாள் எழில். ஆனால் விதி வலியதாயிற்றே... இவ்வளவு நடந்தும் அவன் அவள்பால் கொண்ட அன்பு தான் இன்று ஜெயிக்கும் நிலையில் உள்ளது...

YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...