நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா -1

1.2K 23 0
                                    

1
லண்டன் மாநகரை விட்டு விலகி, நகர்ந்து, ஊர்ந்து, வெளியேறி நெடுஞ்சாலையில் நுழைந்து பயணித்த அந்த வண்டி அமைதியாகவே வழுக்கி கொண்டு ஓடியது. ஓட்டியவன் முகம் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாது ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்கள் போன்று அமைதியாக இருந்தது. பின்னால் இருந்த இருவரது முகங்களில் சொல்லெணா சோகம் அப்பிக்கொண்டிருந்தது.

இருபது நிமிட பயணத்தின் பின், பைன் மரங்களாலும், விதம் விதமான ரோஜா மரங்களாலும், சூழ வெள்ளை வெளேர் என காட்சி அளித்த அந்த இரு மாடி வீட்டுக்கு முன் அதே அமைதியோடு வண்டி ஓய்வுக்கு வந்தது. அதிலிருந்து சுரத்தே இல்லாமல் சோர்ந்து போன நடையுடன் சுபத்திராவும், மனோகரும் இறங்கி கொண்டனர்.

பெருமூச்சு விட்டவாறே சுபத்திராவும், மனோகரும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவர்களாக அந்த பெரிய ஹாலில் இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தனர்.

சுபத்திரா தலையை தன் இரு கைகளாலும்  தாங்கியவாறு இருக்க, மனோகர் பற்களை கடித்தவாறு கோபத்தில் இருந்தார். கம்பீரமான நிமிர்ந்த நடையில் ஆர்ஷன் வந்து கொண்டிருந்தான்.

''இருபத்தொன்பது தொடங்கியும் குழந்தைத்தனம்  போகாத முகம். யாராக இருந்தாலும் வெறுக்க தோன்றாத முகம். கோபம் கொள்பவர்கள் கூட அவனது முகம் பார்த்து அது எங்கே ஓடி போனது? என கேட்க வைக்கும் அமைதியே உருவானவன். குறை ஒன்றும் இல்லாத அழகு. சுட்டு விரல் நீட்டி எச்சரிக்க வாய்ப்பே இல்லாத குணங்கள்.  எல்லோரையும் அனுசரித்து போகும் சுபாவம், அது வேலைக்காரனாக இருந்தாலும் சரி, சொந்தக்காரனாக இருந்தாலும் சரி. எந்த பக்கம் பார்த்தாலும் நேர்மறை எண்ணங்கள்   நிறைந்தவன், ஆர்ப்பாட்டம் இல்லாதவன், அவனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

கோட்டை கழட்டி கையில் வைத்தவன், டையை லூசாக்கி சொல்கேட்டு அவனைப்போலவே அமைதியாக இருந்த கேசத்தை மெல்ல கோதியவனாக பெற்றவர்கள் முன்னே போய் நின்றான்.

அவர்கள் இருவரது விழிகளும் கலங்கியவாறு இவனது முகத்தையே ஏறிட்டது. அவர்களை கனிவுடன் ஒரு நொடி பார்த்தவன், அவர்கள் முன் மண்டியிட்டு அமர்ந்தவனாக இருவரது கரங்களையும் எடுத்து தனது கரங்களுக்குள் வைத்து அழுத்தினான்.
''ம்மா...லீவ் இட்மா...டாட்..டோண்ட் பீல்.." என்றான் உதடு திறந்து. பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துவிட்டு அவனை பாசத்தோடு நோக்கினார்கள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora