நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 49

359 12 0
                                    

49

வீட்டுக்குள் நுழைந்த சுபத்திரா பார்வை தாரிகாவை தேடியது.

''அம்மா அவ மாடியில'' என கை காட்டினான். அவள் யோசனையோடு மாடி ஏறிப் போனாள். ஆர்ஷன் ஹாலில் அமர்ந்து கொண்டான்.

மாடி அறைக்குள் வந்த சுபத்திராவுக்கு நெஞ்சு பகீர் என்றது. கல்யாணம் ஆகியும் இருவரும் ஒரு வீட்டிலேயே இரு குடும்பமாக இருப்பதை கண்டு கொண்டாள். மாமியாரை அங்கு எதிர்பாராத தாரிகா திடுக்கிட்டவாறு பதட்டத்துடன் எழுந்து கொண்டாள். சுபத்திரா எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தவாறு,

''இங்கே வாம்மா!'' என தனதருகில் இடம் காட்டினாள்.

வெளியே போனவன் தாயை கூட்டி வருவான் என எதிர்பார்த்தாள் இல்லை. சினம் உள்ளுக்குள் மூண்டது. அவளுக்கு ''சின்ன குழந்தைகள் மிஸ் அடிச்சுட்டாங்க'' என்று அம்மாவை இழுத்து வருவது போல இருந்தது அவன் செயல்.

''என் பையன் என்கிட்டே நீ கேட்டதை சொன்னான்.'' என்றவாறு சுபத்திரா நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள்.

''......''

''என்ன காரணத்துக்காக அவன் கூட வாழ மறுக்குறேன்னு என்கிட்டேயாவது சொல்றியா ? அவனை உனக்கு ஏத்தது போல மாத்திடுறேன்'' சுபத்திரா கனிவாக பொறுமையாக கேட்டாள்.

''மா..மா..த்திட்டாலும் என் மனது மாறிட போறது இல்லை'' என மெல்லிய குரலில் சொன்னாள். சுபத்திரா அவளது கைகளை எடுத்து அழுத்தியவாறு,

''உன் மாமியாராக கேட்கவில்லை. உன் எதிரே இருப்பது உன் மாமியார் என்பதை மறந்துடு! உன் தாய், உன் தோழி என்று நினைச்சுக்கோ ! மனம் விட்டு பேசு! கல்யாணம் பண்ண ஆயிரம் தடவை யோசிக்கலாம். பிரிஞ்சு போறதுக்கு, வெட்டி கொள்வதற்கு கோடி முறை யோசிக்கணும்!''

''......''

''எல்லா பந்தமும் ஒரு நூல் இழை கொண்டு கட்டப்பட்டு இருக்கும். அதனை பற்றியவாறு சுற்றி இருப்பது குடும்ப உறவுகளும், அதன் மானம், மரியாதை, கவுரவமும் எல்லாம் தான். ஒன்று அறுந்து போனால் தொடர் சங்கிலி பாதிப்பு எல்லாவற்றுக்கும் தான்! சொல் என் பையன ஏன் பிடிக்கலை? அவன்கிட்டே என்ன குறை? ''சுபத்திரா கேட்டதும் தாரிகாவும் முழுக்க நனைஞ்ச பின் முக்காடு எதற்கு என்ற நிலைக்கு வந்து விட்டிருந்தாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOpowieści tętniące życiem. Odkryj je teraz