"ஜெயன்..... உன்னால முடிஞ்சா இன்னிக்கு என்னை ஊட்டிக்கு கூட்டிட்டுப் போறியா? அவலாஞ்சியில இருந்து ஊட்டி பக்கந்தானே?" என்று கேட்டவளிடம்,
"கை கால்ல பலம் இருக்குற ஒரு ட்ரைவருக்கு எந்த தூரமும் தூரமேயில்லங்க மேடம்.... ஒடம்பு மட்டும் ஒத்துழச்சா கன்யாகுமரியில இருந்து இந்தியோவோட பார்டர் கோடு வரைக்கும் கூட போயி தொட்டுப் பாத்துட்டு வரலாம்; ஆனா திடீர்னு எதுக்கு ஊட்டிக்குப் போகணும்னு கேக்குறீங்க நீங்க?" என்று அவள் அவனிடம் கேட்ட உதவிக்கு பதிலாக ஒரு கேள்வியை அவளிடம் கேட்டான்.
"அது வந்து.... அங்க போயிட்டு சும்மா ஒரு கப் டீ குடிச்சுட்டு வரலாம்னு தோணுச்சு!" என்றாள் வர்த்தினி தயங்கியபடி.
"ஏன் இது வரைக்கும் அழுததெல்லாம் பத்தாதா ஒனக்கு?
குடிக்குற டீய இங்கருந்தே குடி போதும்! நீ ஊட்டிக்கு எல்லாம் போயி ஒண்ணும் கிழிக்க வேண்டியதில்ல!" என்றான் சற்றே அதிகப்படியான குரலில்.அவளது காதலன் வருங்கால கணவனாக இருந்த வினோத்தை பற்றி வதனி இதுநாள் வரை ஜெயனிடம் ஒருவார்த்தை கூட பகிர்ந்து கொண்டதில்லை..... ஆனாலும் முகிலமுதத்தின் தகவல் உபயத்தால் வினோத்துடைய இடது கைப்பழக்கம் வரையில் அனைத்தும் ஜெயனுக்கு அத்துப்படி!
"அந்த வினோத்து ரொம்ப ரொம்ப நல்ல புள்ளயாமுடா ஜெயனு.... அதிந்து கூட பேசாதாம்; நம்ம வதனிப்புள்ளய அப்டி தாங்குமாம்; என்ன தான் பிரச்சனயின்னாலும் அதோட குடும்பம் இவங்களோட குடும்பம் ரெண்டுத்தயுமே உட்டுக் குடுக்காம சரியா நடந்துக்குமாம்! ஹூ.......ம்! இம்புட்டு நல்லபுள்ளக்கு ஆயுச ஆண்டவன் இன்னுங்கொஞ்சம் அதிகமா குடுத்துருக்கலாம்!" என்று அவன் புகழுரையில் பேச்சை ஆரம்பித்து புலம்பலில் பேச்சை முடிப்பார் முகிலமுதம்.
பர்வதவர்த்தினியை அவன் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு தாங்கியிருந்தாலும் இப்போதைய நிலையில் அந்த வினோத் ஒரு இறந்தகாலம்; ஒன்று அவள் அவளுடைய பேங்க்கின் நட்பு வட்டாரத்தில் அவளுக்கு இணையான ஒரு மாப்பிள்ளையை தேடி காதலித்து அவனை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்க வேண்டும்; இல்லையேல் இருக்கவே இருக்கிறான் இந்த ஜனமேஜயன்..... வேறு எவனும் இல்லாமல், இவனும் இல்லாமல் இன்னமும் பர்வதவர்த்தினி அந்த வினோத்தின் நினைவுகளிலேயே மூழ்கி இருப்பதை ஜெயன் சற்றும் விரும்பவில்லை, ஆனால் பர்வதவர்த்தினி அந்த செயலை மிகவும் விரும்பினாள்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...