இப்போதெல்லாம் அமுதாம்மாவிடம் வந்து அவள் அழுவது மிக அரிதாகியிருந்தது.
அம்மா, வினோத் இவர்கள் இருவரையும் நினைத்து படுக்கையில் விழும் போது அழுவாளோ என்னவோ? தன்னுடைய பலவீனத்தை வெளியில் காட்டிக் கொள்ளாத அளவிற்கு தைரியம் பெற்றிருந்தாள் பர்வதவர்த்தினி.சாயந்தர வேளைகளில் அவள் மறுநாள் காலையில் உடுத்த வேண்டிய புடவையையோ, டாப்ஸையோ அயர்ன் செய்து கொண்டிருந்தாள் என்றால் ஜெயன் அவளது துணியின் தரத்தை கைகளால் அளந்து, கண்களால் ஆராய்ச்சிப் பார்வை பார்த்த படியே நிற்பான்.
"உன்னோட ட்ரெஸ்ஸூ மட்டும் எப்டி எப்பவும் பளபளான்னே இருக்கு நானும் இப்பத்தா ஆயிர ரூபாய்க்கு மூணுன்னு ரோட்டுக்கடையில சட்ட வாங்குனேன் வர்த்தினி! ஒன்னோடது மாதிரியில்லாம, அதெல்லாம் போட்ட ரெண்டாவது தடவையில பல்ல இளிக்குது! என்ன செய்ய? உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் இத மாதிரி நல்ல துணிய ஒளிச்சு வச்சு விக்குறாய்ங்களோ என்னவோ புரிய மாட்டேங்குதும்மா!" என்று சொல்பவனின் பேச்சில் கோபமுற்று அவன் தலையில் கொட்டுபவள்,
"முட்ட தோச, நெய் ரோஸ்ட், பூரி உருளைக்கிழங்கு, லெமன் சாதம் இதெல்லாம் எங்க நல்லாயிருக்கும்னு தேடி தேடி நல்ல க்வாலிட்டியில இருக்கான்னு பார்த்து வாங்குறல்ல? அதுமாதிரி போடுற சட்டையில கொஞ்சம் க்வாலிட்டி பாத்தா என்ன? எழுநூறு, எண்ணூறு ரூபாய்ல ஒரு சட்டைய எடு ஜெயன்! அப்பதான் அதோட லைஃப் ரெண்டு வருஷத்துக்காவது நல்லா இருக்கும்! எங்களுக்கு மட்டும் ட்ரெஸ்ஸ ஒளிச்சு வச்சு விக்குறாங்க; ஆளப்பாரு..... இடியட்!" என்று அவனிடம் சொல்லி அன்றாட விஷயத்தில் கூட அவனுக்கு சில அறிவுரைகளும், பரிந்துரைகளும் கொடுப்பாள்.
இப்படி உரிமையாக அவள் அவனிடம் சண்டை போட வேண்டுமென்று தானே அவனும் சிறுபிள்ளைத்தனமாக எதையாவது அவளிடம் கேட்பது? ஜெயனுடைய அந்த சாகசத்தை ஏனோ வதனி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
முகிலமுதத்தால் தற்போது ஓரளவுக்கு வேலை செய்ய முடிந்ததால் காலை வேலை வதனிக்கும், ஜெயனுக்கும் இன்னும் எளிதாகிப் போனது.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...