ஜெயனும் வதனியும் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி ஊட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் எல்க் ஹில் முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
"ஐயோ ஜெயன்.... நீ கார்தா ஸ்மூத்தா ட்ரைவ் பண்ற.... ஆனா ஒனக்கு நல்லாவே பைக் ஓட்டவே தெரியல..... பைக்ல இப்டி எக்ஸ் எக்ஸ்ஸா போட்டு இத்தன கட் அடிக்காதடா! வாந்தி வருது எனக்கு!" என்று சொல்லி அவன் முதுகை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டவளிடம்,
"இவ ஒருத்தி.... நேத்துல இருந்து வாந்தி வருது, வாந்தி வருதுன்னுட்டு! வாந்தி வந்தா வாயில இருந்து எடுறீ! வாயவும், வண்டியவும் கழுவிக்கலாம்; ஹில்ஸ்ல வண்டிய வளைக்காம எப்டி ஓட்டுறது?" என்று அவளிடம் கேட்டபடியே ஓட்டினான்.
மலையின் அழகு, பச்சை பசேல் என்ற தோற்றம், படிக்கட்டுகள், பெரிய முருகன் சிலை என ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவள் அவனைப் படுத்துவதை சிறிது நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே படிகளில் ஏறத் தொடங்கி விட்டாள்.
"வர்த்தினி..... ஒனக்கு உள்ள வரப் புடிக்கலையின்னா பரவாயில்ல! நீ வெளியவே இரு; இவ்ள தூரம் ஏறி வந்ததுக்கு நான் போயி ஒருதடவ முருகன பார்த்து ஒரு கும்புடு போட்டுட்டு வாரேன்!" என்று சொன்னவனிடம்,
"இல்ல.... நானும் ஒங்கூட வருவேன்!" என்று பதிலளித்து அவன் கையைப் பற்றிக் கொண்டு கோவிலுக்குள் சென்றாள் வதனி.
சுவாமிக்கு பூக்கள் வாங்கிக் கொடுத்து, "ஒரு அர்ச்சன சாமி!" என்று சொல்லி முகுந்தன், ருத்ரன், கமலோத்பவன் மூவரையும் தன் பெயரில் வைத்திருக்கும் தேவர்களின் சேனாதிபதியை
மனதார எதோ ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தவனை வேடிக்கை பார்த்தவாறு அவனருகில் நின்று கொண்டிருந்தாள் ஜெயனுடைய தர்மபத்தினி.அவளுக்கென்று பெரிதாக அவனைப் போல் ப்ரார்த்தனை எல்லாம் இல்லை. "எல்லாரையும் நல்லா வச்சிருங்க!" என்று ஏதோ கடமைக்கு ஒரு வேண்டுதலை வைத்தவள் அந்த முருகனின் சிலையை, கோவிலுக்குள் எரிந்து கொண்டிருந்த தீபத்தை, கோவிலின் பிரகாரத்தில் மாட்டப்பட்டிருந்த மணிகளை, ஊட்டி மலைகளின் அழகை, கோவிலுக்கு வந்திருந்த குழந்தைகளை என ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...