"அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு இப்ப நீ என்ன செய்யப் போறடா முண்டம்? எங்கிட்ட அவ யாருன்னு இப்ப விசாரிக்குற அலிகேட்டர் வாயன்
அவ கிட்ட நீங்க யாருன்னு ஏன்டா விசாரிக்கல?" என்று தன்னை திட்டியவனிடம் வெறுமனே உச்சுக்கொட்டினான் நஸார்.அந்த ரிஸாட்டின் வரவேற்புப் பகுதியில் கெஸ்ட்டுகளுக்காக போடப்பட்டிருந்த ஸோஃபாவில் இருவரும் சற்றே தளர்ந்து போய் அமர்ந்திருந்தனர்.
தாங்கள் வாக்யூம் க்ளீன் செய்து சுத்தம் செய்த ஸோஃபாவில் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்திருந்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு! உணவு இடைவேளை தவிர நாள் முழுவதும் ஓடி ஓடி வேலை செய்ததால் அவர்களுடைய உடம்பில் தேவையான அளவிற்கு சக்தியும் இல்லை!
"டேய்.... நான் உன்னைய திட்டிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உச்சுக் கொட்டுனா.... என்ன அர்த்தம்?" என்று கேட்டான் ஜெயன்.
"இல்லடா; அந்தப் பொண்ணப் பாக்கவே பாவமா இருந்துச்சு! உங்கிட்ட ஏதோ சொல்லியே ஆகணும்ங்குற மாதிரி ரொம்ப தெளிவா கார் கலர், வண்டி நம்பரு எல்லாத்தையும் சொல்லி உன்னைய விசாரிச்சுச்சு! அதான்டா அந்த பார்வதி நாயர்ட்ட நீ ஹாஸ்பிட்டல்ல இருப்பன்னு சொல்லி அனுப்பி விட்டேன்!" என்று சொன்ன நஸாரிடம்,
"இதே வேலையாப் போச்சுடா ஒனக்கு! ஒம்பொண்டாட்டி ஜோதிகா, சவூதியில வேலை பாக்குற மனுஷன் ரவிச்சந்திரன், உங்கம்மா பத்மினி, நான் விஷாலு, நீ ராணா இந்த வரிசையில அந்தப்புள்ளயவும் விட்டு வக்கலியா நீயி? உன் கூட சேந்து நானும் கெட்டுப் போயிட்டேன் போலிருக்கு. எனக்கும் அவள மொததடவ பாக்கும்போதே இந்தப் பொண்ணு பார்வதி நாயர் மாதிரி இருக்காளேன்னு தோணுச்சு! உன்னோட வியாதி தான் எனக்கும் ஒட்டிக்கிடுச்சுன்னு நெனக்குறேன்!"
என்று தன் நண்பனின் விநோத பழக்கத்தைப் பற்றி அவனிடம் குறைசொல்லிக் கொண்டிருந்தான் ஜெயன்."சரிடா.... ஒவ்வொருத்தரையும் பாத்தவுடனே அவங்க எந்த சினிமா ஸ்டார் மாதிரி இருக்காங்கன்னு யோசிக்குறது என்னோட பழக்கம்! நீ சீக்கிரத்துல அந்த பொண்ணை பத்தி சொல்லி முடிடா; ஏன்னா
இப்ப கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி இங்க வந்து நிப்பா! அதுக்குள்ள ரொம்ப நீட்டி முழக்காம டக்குன்னு அவளைப் பத்தி சொல்லு!" என்று சொன்ன வாக்கியத்தை நஸார் முழுதாக முடிக்கக்கூட இல்லை. அதற்குள் மரியம் கோபப்பார்வையுடன் அங்கு வந்து நின்றாள்.
KAMU SEDANG MEMBACA
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romansaஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...