எல்லைக் கருப்பண்ண சாமி..

77 3 0
                                    

முன்னால கொண்டையோட
கையில உயரமா
வீச்சருவா ஏந்திகிட்டு ,
ஒய்யாரமா ஒருகால் மடக்கி
கிடா மீசையோட
ஊரு எல்லையிலே
உக்காந்து உறங்காம
வெறிச்சுப் பாக்கும் முழியோட
ஊரையெல்லாங் காக்கும்
எங்க ஊரு காவல் தெய்வம்
கருப்பண்ணசாமி.

ஏழெட்டு கடா வெட்டி
சாராய பாட்டில் வச்சு
வருசத்துக்கொருமொற மட்டும்
திருவிழா நடத்தி
மத்தநாளெல்லாம்
அவர தனியா
தவிக்க விட்டாலும்
ஊரக் காக்கிறதில
அவரு ஒரு குறையும்
வச்சதில்ல.

ஆராச்சும்
சின்னதா தப்பு  செஞ்சாலே
கனவுல வந்து
பெருசா முழிச்சு பயங்காட்டும்.
பெருசா தப்பு செஞ்சா
வெள்ளக்குதிரயில பாஞ்சு வந்து
யாருக்கும் தெரியாம
ராவோடராவா தலயறுக்கும்.

ஆனா
தனியா வயலுக்கு
தண்ணி காட்டப்போன
செல்லாயி அக்காள
டாஸ்மாக் சரக்கடிச்ச போதையில
கறபழிச்சு கொல செஞ்சு
செயிலுக்கு போயி
போனவாரம் பெயில்ல வந்த
பண்ணையார் மவன்
முத்துபாண்டியையும்
அவங்கூட்டாளி
பூசாரி மவன்
செல்ல கருப்பனையும்
ஒன்னுமே செய்யல.

கோட்டோவியங்கள்Место, где живут истории. Откройте их для себя