சிறுதூர ரயில் பயணம்.

15 3 1
                                    

சிறுதூர ரயில் பயணமொன்றில்
ஏறிய சிறுபெண்ணவளுக்கு
தோழர்கள் பலரிருந்தனர்.

அதில் இருந்த அந்த
பல வண்ணக் கேசத்துக்குச்
சொந்தக்காரன்
அவளுடையக் காதலானக
இருக்கக்கூடும்.

அவளை அடிக்கடித்
தொட்டுப் பேசும் 
ஒற்றைக்காது கம்மல் காரனுங்கூட
வண்ணக்கேசத்தானுக்கு
போட்டியாய் இருக்கக்கூடும்.

அவர்களின் சிரிப்பொலிகளில்
மேலும் பொங்கி வழிந்தது 
அவர்களின் இளமைப் பருவம்.

ரயில் பெட்டி பிரயாணிகள்
எல்லாரும் சிதறிப் போயினர்
இவர்களது பெட்டி நிறைந்த
சிரிப்பு வெடிச் சத்தங்களில்.

எல்லாருடைய கவனங்களில்
கனத்துப் போயிருக்கக்கூடும்
இவர்களது பயணம்.

பல நிறுத்தங்கள் தாண்டி
இவர்கள் இறங்கிய பின்னர்
இரயிலுக்குமிருந்தது
நீளமான பெருமூச்சொன்று.

தாமிழந்து போனதொரு
இளமையை, இருபால் நட்பை
இன்பமாய் அனுபவிக்கும் அவர்களைக் கண்டு
அந்த சிறுபெண்ணைப் பழிப்பதைத் தவிர
வேறன்ன செய்யமுடியும்
மற்ற ரயில் பயணிகளால்.

கோட்டோவியங்கள்Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ