மூப்பூ.

9 1 0
                                    

முதல் முறை வந்தவனுக்கு
முக்கால் பாகம் முடியில்லையென
அம்மா கழித்தாள்.
அடுத்து வந்தவனுக்கோ
அரசில் வேலையில்லையென
அண்ணன் மறுத்தான்.
மூன்றாவதாய் வந்தவனோ
கையில் தழும்புவென
தானே தகர்த்தான்.
முப்பதாய் வந்தவனுக்கும்
மறுதலிக்க இருந்தது
ஏதோவொரு காரணம்.
இடையில் மணமுடித்து வந்த
அண்ணிக்குமிருந்தது
என் குறைகள் பிறரிடம் சொல்ல.
பஜ்ஜிக்கும் சொஜ்ஜிக்குமென்றே
தனியான நிதியொதுக்கிறார்
அப்பா தன் மாதாந்திர
நிதியறிக்கையில்.
அகவை முப்பத்தைந்து
தாண்டியபின்னர்
எனக்கொன்றும் அப்படித் தேவையாயில்லை
அந்தக் கல்யாணமும்
எனக்கான அந்த ராஜகுமாரனும்.
தொடையிடுக்கில் உயிர்பிழியும்
வலியோடு வீணில் உதிரும் உதிரத்தில் கரையும்
மாதாந்திர வேதனையினின்று
ஒரு விடுதலையைத் தவிர.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now