விரைந்து வா தசரதகுமாரா

15 3 0
                                    

காட்டுக்குள் கல்லொன்றைக்
கட்டிக்கொண்டுக் கண்ணீர் வடிக்கிறானவன்.

கேட்டால் சற்றுமுன்வரை
அதுதன் மனைவியென்கிறான்.
என்னால்தானிப்படி என்கிறான்.

தூரத்தில் மரமேறியிருந்ததொரு
உடலெங்கும் கண்களாயிருந்த பூனையைக் காட்டி
அது இவளை காமுற்றதென்கிறான்.

நேற்றுவரை நூற்ற பாசவலை
அறுத்ததையெண்ணி அரற்றுகிறான்.

அழுக்கில்லா தேகமுண்டா
கறையில்லா நிலவு உண்டா
குறையிலா மனிதனுண்டா
மனைவியைக் கல்லாய்ச்
சமைத்தவன்
மனிதரில் சேர்த்தியுண்டா
அவளில்லா வாழ்விதனை
வாழத்தான் வழியுமுண்டா

பித்தாய் புலம்புகிறான்.
கல்விட்டகன்றானில்லை.
கட்டியே கிடந்தானவன்.

மாற்றுதான் என்னவென
கேட்டதில்

கைவண்ணங்காட்டுமவன்
கழல் துகள் கதுவப்பெறின்
பெண்ணுருக் கொள்வாளிவள்
கால்வண்ணங்காட்டச் சொல்லி
சடுதியில் அவனை அழைத்துவாரும்

இந்த கௌதமனின் சாபம் நீங்க.

என்கிறானவன்.

கோட்டோவியங்கள்Donde viven las historias. Descúbrelo ahora