ரோஜாப் பதியன்

37 8 2
                                    

நகரமொன்று நெருங்குவதின்
அறிகுறியாய் தூரத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வெளிச்சப்புள்ளிகள்.

அதிகாலை இருட்டை
ஹைபீம் வெளிச்சத்தில்
கிழித்துக்கொண்டு ஓடும் பேருந்தின்
ஜன்னலோர இருக்கையில்
ஐந்து லட்சத்துக்கும்
ஐம்பது பவுணுக்கும்
இன்ன பிற அத்யாதிகளுக்கும்
என் கழுத்தில்
தழைய தழைய
தொங்கும் தாலியை
மூன்று நாட்களுக்குமுன் கட்டிய
புதுக் கணவன்
என் தோள் சாய்ந்து
தூங்கி வருகிறான்

பதியன் போட்ட
ரோஜாச் செடி போல
வேர் விடுத்து காம்பறுத்து
திருமணமென
இவனோடு இணைத்து
பஸ் ஏற்றி
அனுப்பிவிட்டார்கள்.

இனி இவனது
தோட்டத்தில்தான்
நான் எனது
எல்லாப் பூக்களையும்
பூக்கவேண்டும்.
எல்லா இலைகளையும்
உதிர்க்க வேண்டும்.

எதிர்காலங்களைக் குறித்த
விடை தெரியா
கேள்விகளுடன்
நான் மட்டும்
உறங்காமலிருக்க
பேருந்தின் சன்னல் வழி
இடைவிடாது நுழைந்த
காற்றின் சுகத்தில்
என் கணவனைப் போலவே
எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கோட்டோவியங்கள்حيث تعيش القصص. اكتشف الآن