பாகம் 3
குமணன் இல்லம்
உடைந்து கிடந்த பூஜாடியின் பக்கத்தில் நடுங்கியபடி நின்றிருந்தாள் வர்ஷினி. எப்பொழுது வேண்டுமானாலும் அவளுக்கு அடி விழலாம். அவள் எதிர்பார்த்தபடியே அங்கு கோபமாய் வந்தார் கல்பனா. அந்த பூஜாடியை யார் உடைத்தது என்ற கேள்வியை கூட அவர் எழுப்பவில்லை. வர்ஷினியை அடிக்க தன் கையை ஓங்கினார்.
அப்போது...
*மாம்* என்ற வார்த்தையை கேட்டு அவர் அப்படியே நின்றார். வர்ஷினியின் தம்பி ரிஷியின் குரல் தான் அது.
"சாரி, மாம்... கை தவறி அந்த ஜாடியை நான் உடச்சிட்டேன்" என்றான்
கல்பனாவின் முகம் உடனடியாக சகஜமாய் மாறியது.
"இதை உடச்சது நீயா கண்ணா? பரவாயில்ல விடு... "
அவர் பார்வை வர்ஷினியின் பக்கம் திரும்பியது.
"எதுக்கு மரம் மாதிரி நிக்கிற? அவன் கையில, கால்ல குத்துறதுக்கு முன்னாடி அதை கிளீன் பண்ணு"
"சரிமா"
அதை சுத்தப்படுத்த, முழங்காலிட்டபடி தரையில் அமர்ந்தாள் வர்ஷினி. ரிஷியின் தலையைச் செல்லமாய் வருடிவிட்டு, அங்கிருந்து சென்றார் கல்பனா.
"தேங்க்யூ, ரிஷி"
"எனக்கு ஏன் கா தேங்க்ஸ் சொல்ற?"
"அம்மாகிட்டயிருந்து நீ என்னை காப்பாத்திட்ட"
"அதை நான் எப்பவுமே செய்வேன், கா"
வர்ஷினியின் கண்கள் கலங்கின. இந்த சின்னப் பையன் மட்டும் இல்லாவிட்டால் அவள் எப்பொழுதோ இறந்து போயிருப்பாள். இந்த இரக்கமற்ற மனிதர்கள், அவளை எப்பொழுதோ கொன்று புதைத்திருப்பார்கள்.
"நீ எழுந்திரு கா" அவள் தோளைப் பிடித்துத் தூக்கி விட்டான்.
"லட்சுமி அக்கா..." என்று வேலைக்காரப் பெண்ணை கூப்பிட்டான்.
லட்சுமி உடனடியாக அங்கு ஓடி வந்தாள்.
"இதை கிளீன் பண்ணுங்க" என்றான் ரிஷி.