பாகம் 58
வர்ஷினியும், ரிஷியும் பதட்டமாக இருப்பதை பார்த்தான் நிமல். அவர்களுக்கு என்ன கூறி சமாதானப்படுத்துவது என்பது தான் அவனுக்குப் புரியவில்லை. அவர்கள் ஏதோ முணுமுணுப்பதை அவன் கவனித்தான்.
"நீங்க ரெண்டு பேரும் டென்ஷன் ஆகாம இருங்க" என்றான்.
"டென்ஷன் ஆகாம எப்படி இருக்கிறது, மாம்ஸ்? அப்பா ஏன் கான்ஃபரன்ஸ்ஸை அட்டென்ட் பண்ணலன்னு ஒன்னும் புரியல. அவர் எப்போ திரும்பி வரப் போறாருன்னும் தெரியல. நான் இங்க தங்கி இருக்கிற விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா என்ன செய்றது? அவங்க எப்ப வர போறாங்கன்னு தெரிஞ்சா தானே நாம அதுக்கேத்த மாதிரி ப்ரிப்பர் ஆக முடியும்?" என்றான்.
நிமல், வர்ஷினியை பார்க்க, அவளும் ஆமாம் என்று தலையசைத்தாள். அப்படி என்றால், இவர்கள் அதைப் பற்றித் தான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
"லட்சுமிக்கு ஃபோன் பண்ணி, அவங்க ஏதாவது சொன்னாங்களான்னு கேளு" என்றான் நிமல்.
"நான் எப்போ திரும்பி வருவேன்னு அவங்க கேட்பாங்களே" என்றான் ரிஷி வெறுப்புடன்.
"உங்க அப்பா, அம்மா வந்ததுக்கப்புறம் தான் திரும்பி வருவேன்னு சொல்லு. அதனால, அவங்க எப்ப வர போறாங்கன்னு உனக்கு சொல்ல சொல்லு" என்றான் நிமல்.
"சரி... அவங்க ரெண்டு பேரும் எங்க சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல" என்றான் அலுப்புடன் தன் கைபேசியை எடுத்தவாறு.
"நாளைக்கு நான் ஊட்டிக்கு போறேன்" என்றான் நிமல் வர்ஷினியிடம்.
"வேண்டாம் நிமல். நீங்க போக வேண்டாம்"
"ஏன்?"
"உங்களுக்கு எங்க அப்பாவை பத்தி தெரியாதா? அவர் யாரையுமே மதிக்க மாட்டார்... முக்கியமாக உங்களை... குணசேகரன் அங்கிள் அவரை தேடட்டும்"
"ஆர் யூ ஷ்யூர்?"
"ஆமாம்... அவர் வேற ஏதாவது பிளான் பண்ணி இருக்கலாம். நம்ம அதுல தலையிட வேண்டாம்னு நினைக்கிறேன்"