பாகம் 32
கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர், கன்னத்தைத் தொடும் முன் அதை துடைத்தபடியே இருந்தான் நிமல். அன்று போல் அவன் என்றுமே உடைந்து போனதில்லை. வர்ஷினி அவனிடம் பேசவில்லை. அப்படி என்றால், அவள் அவனை நம்பவில்லை. விஸ்வநாதனின் வார்த்தைகளை அவள் முழுமையாய் நம்பிவிட்டாள். அவன் அவளை தூண்டில் மீனாய் பயன்படுத்தியதாக அவள் நினைக்கிறாள். அவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து விட்டது. தன்னை கையாலாகாதவனாய் உணர்ந்தான் நிமல்.
"ரிலாக்சா இரு, நிமல்..." அவனை சமாதானப்படுத்த முயன்றான் ராஜா.
"எப்படி நான் ரிலாக்ஸ்ஸா இருக்கிறது? அவ என்கிட்ட பேச கூட தயாரா இல்ல..."
"அவ ஸ்டிரெஸ்ல இருக்கா. அவ கனவுல கூட நினைக்காத ஒரு விஷயத்தை எதிர்கொண்டிருக்கா. அவளுக்கு சுதாகரிச்சிக்க கொஞ்சம் டைம் கொடு. ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனதுக்கப்புறம், நிச்சயம் உனக்கு ஃபோன் பண்ணுவா. அவளால உன்கிட்ட பேசாம இருக்கவே முடியாது. ஒருவேளை, அதுக்கு அப்புறமும் அவ உன்கிட்ட பேசலனா, என்ன செய்யலாம்னு யோசி. அவ என்ன செய்றான்னு பார்த்துட்டு, அப்புறம் முடிவு பண்ணு"
ராஜா கூறுவதும் சரி என்றே பட்டது நிமலுக்கு. மருத்துவமனையிலிருந்து, வர்ஷினி வீட்டிற்கு சென்ற பின் பேசுவது என்று முடிவெடுத்தான் நிமல்.
மறுநாள்
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள் வர்ஷினி. அவ்வளவு சீக்கிரம் அவளை வீட்டிற்கு அனுப்பிய போது, ஆச்சரியமாயிருந்தது வர்ஷினிக்கு. ஏனென்றால், அவளுக்கு தெரியும் அவள் பூரணமாக குணமாகவில்லை என்று. பெரும்பாலான காயங்கள் வெளியில் தெரியாமல் இருந்தாலும், உள்ளுக்குள் வலி இருந்து கொண்டே இருந்தது. அதை அவள் மருத்துவரிடமும் கூறியிருந்தாள்.
எதனால் அவள் சீக்கிரம் வீடு திரும்பினாள் என்று அவளால் ஊகிக்க முடிந்தது. அவளுடைய அப்பாவை பற்றி அவளுக்கு தெரியாதா? அவர் என்ன செய்ய காத்திருக்கிறாரோ...? ஒன்று மட்டும் நிச்சயம். இனி எப்பொழுதும் நிமலை பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கப் போவதில்லை.