பாகம் 21
நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் தலையணையின் அடியில் வைத்திருந்த ஃபோனின் அதிர்வலைகள், அவளுடைய தூக்கத்தை இடையூறு செய்தன. அது நிமலிடமிருந்து வந்த வீடியோ கால் என்பதால், விளக்கை ஒளிர விட்டு, கண்ணை கசக்கியபடி, தூக்க கலக்கத்துடன் பேசினாள்.
"நிமல்..."
"ஹாப்பி பர்த்டே, மை டியர் தூங்குமூஞ்சி" என்று அவன் சொல்ல,
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் வர்ஷினி. கண்களை நன்றாக விரித்து, அவளுடைய கைபேசியின் திரையை பார்த்த பொழுது, ஒரு சாக்லேட் கேக்கை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் நிமல். அதன் மீது குத்தி வைக்கப்பட்டிருந்த பாடும் மெழுகுவர்த்தி, மெல்லிய சத்தத்துடன், அழகாய் ஒரு வட்டம் அடித்து நின்றது. அப்பொழுது பிரகாஷும், ராஜாவும் *ஹாப்பி பர்த்டே டூ யூ* என்று பாடிக்கொண்டு கைபேசியின் திரைக்குள் வந்தார்கள். வர்ஷினி சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.
"அழுதா, உதை வாங்குவ" என்று அவளை மிரட்டினான் நிமல்.
கண்ணீர் அவள் கன்னத்தில் உருண்டோடும் முன், துடைத்துக்கொண்டாள் வாஷினி.
அந்த கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டுவதைப் போல் பாசாங்கு செய்தான் நிமல். அவளும் அதை சாப்பிடுவது போல் பாசாங்கு செய்தாள். ஒரு கேக் துண்டை வெட்டி, பிரகாஷ் அதை சாப்பிட முயல, அதை அப்படியே அவன் முகத்தில் அப்பினான் ராஜா. அதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் வர்ஷினி. பிரகாஷ், அதையே ராஜாவிற்கு செய்வதற்கு முன், ஒரு பெரிய துண்டை எடுத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்திக் கொண்டான் நிமல். அவர்களுடைய அலப்பறையை பார்த்து, வர்ஷினி புன்னகைத்தது நிமலுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தது.
"படுத்து தூங்கு. அப்போ தான் காலையில பார்க்க ஃபிரஷ்ஷா இருப்ப"
சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"குட் நைட்"