பாகம் 40
தனது உடையை எடுக்க, அலமாரியை நோக்கி சென்றான் நிமல். கதவை திறந்து, துணியை எடுக்க நீட்டிய அவனது கை, பாதியிலேயே நின்றது, அங்கு வர்ஷினியின் உடைகள் இருந்ததை பார்த்து. குழம்பிப் போன அவன், கண்களைக் கசக்கினான். அலமாரியின் கதவை அகல திறந்து, அவளுடைய துணிமணிகள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஆச்சரியமாய் பார்த்தான். அவன் கனவு கண்டுகொண்டு இருக்கிறானா? மெல்ல அவள் உடையை தொட்டான், அது மறைந்து விடுமோ என்ற எண்ணத்துடன். ஆனால், அவை மறைந்து போகவில்லை. அவள் பொருள்களின் மீது கண்களை ஓட்டியபடி, பின்னோக்கி நகர்ந்தான், ஒன்றும் புரியாமல். இது எப்படி சாத்தியம்? அவள் பொருள்களின் மீது இருந்து கண்களை எடுக்காமல், அவற்றை பார்த்தபடி, சிலை போல் நின்றான்.
உண்மையிலேயே, வர்ஷினி அவனுடைய அறைக்கு வந்து விட்டாளா? ஒருவேளை, இதை குறிக்கும் வண்ணம் தான் 'அவள் வருவாளே' என்று பார்வதி பாடினாரோ? பைத்தியக்காரனைப் போல் சிரித்தான் நிமல்.
நாலு கால் பாய்ச்சலில் கீழ்தளம் நோக்கி ஓடினான். பார்வதி வர்ஷினியுடன் காபி குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அதே இடத்தில் நின்றான். வர்ஷினி அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். காபி குடித்தபடி அவன் அங்கு நிற்பதை கவனித்தார் பார்வதி.
வர்ஷினியின் பொருள்கள் எப்படி தன் அறைக்கு வந்தது? என்று பார்வதியிடம் சைகையால் கேட்டான், நிமல். வர்ஷினி தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததால், பார்வதியால் அவனுக்கு பதில் கூற முடியவில்லை. அவர் ஏதாவது சைகை செய்தால், அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று வர்ஷினிக்குத் தெரிந்துவிடுமே.
"கோபால்" என்று அழைத்தார் பார்வதி.
சமையலறையிலிருந்து வந்தார் கோபாலன்.
"அவனுக்கு என்ன வேணும்னு கேளுங்க" என்றார்.
கோபாலன் தன்னை நோக்கி வருவதை பார்த்து,
"காபி கொண்டு வாங்க" என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான் நிமல்.