பாகம் 47
அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டான் நிமல். காயம் மிகவும் ஆழமானது என்பதால், தொடர்ந்து அவனுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இல்லாவிட்டால், அவன் கண் விழிக்கும் பொழுது உயிர் போகுமளவிற்கு வலியிருக்குமே...!
வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டாள் வர்ஷினி. பிடிவாதமாக பார்வதியுடன் மருத்துவமனையிலேயே தங்கினாள். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் தன் சுய நினைவை பெற்றான் நிமல். அவன் கண் விழித்த பொழுது, அவன் அருகில், நாற்காலியில் அமர்ந்து, அவனுடைய படுக்கையில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார் பார்வதி. அவன் மெல்ல அவர் தலையை தொட, திடுக்கிட்டு எழுந்தார் பார்வதி. அவன் கண் விழித்துவிட்டதை பார்த்து புன்னகை புரிந்தார்.
"நிம்மு..."
"வர்ஷு எப்படி இருக்கா?" என்றான் மெல்லிய குரலில்.
அவனுடைய கட்டிலுக்கு பின்னால் இருந்த ஜன்னலின் அருகில் நின்றிருந்த வர்ஷினி, அவன் குரல் கேட்டு முன்னால் வந்தாள். அவள் நன்றாக இருப்பதைப் பார்த்து புன்னகைத்தான்.
"ரொம்ப வலிக்குதா, நிம்மு?" என்றார் பார்வதி.
இல்லை என்று தலையசைத்தபடி கண்களை மூடினான். அவன் பலவீனமாய் இருந்தது நன்றாகவே தெரிந்தது. அவன் கண் விழித்துவிட்ட செய்தியை மருத்துவரிடம் கூற ஓடினாள் வர்ஷினி. அவளுடன் வந்த மருத்துவர், நிமலை பரிசோதித்து பார்த்தார். அவன் நன்றாக இருக்கவே நிம்மதி பெருமூச்சு விட்டார்.
"நாளைக்கு காலையிலயிருந்து லிக்விட் ஃபுட் கொடுக்க ஆரம்பிங்க. அவனோட ப்ராக்ரஸ்ஸை ஒரு நாள் மானிட்டர் பண்ணதுக்கு அப்பறம், சாலிட் ஃபுட் கொடுக்குறத பத்தி யோசிக்கலாம்."
"ஓகே டாக்டர்" என்றார் பார்வதி.
அந்த அறையைவிட்டு சென்றார் மருத்துவர்.
நிமலின் உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்தது. மருந்துகளின் உதவியால் வலியும் குறைந்து கொண்டு வந்தது. தூக்க மாத்திரையின் துணையுடன் தான் அவனால் வலியை மறந்து உறங்க முடிந்தது.