இறுதி பாகம்
ஆம். வர்ஷினிக்கு தெரியும். ஆனால் எப்படி?
சற்றே பின்னோக்கி பயணிப்போம்...
அனைவரும் சுதாவின் வீட்டிற்கு செல்ல தயாரானார்கள். ஆனால், வர்ஷினிக்கு மட்டும் நிமலை தனியாக விட்டுச் செல்ல மனமில்லை. அதனால் பாதி வழியிலேயே காரை விட்டு இறங்கி, டாக்ஸி பிடித்துகொண்டு திரும்பி வந்தாள். அவள் இனியவர்களின் இருப்பிடம் வந்த போது, ராஜா நிமலிடம் கூறியது அவள் காதில் விழுந்தது.
"பிரைவேட் ஃபிலைட் ரெடியா இருக்கு" என்றான் ராஜா.
"நானும் ரெடி" என்றான் நிமல்.
"எல்லாரும் சாயங்காலம் திரும்பி வர லேட் ஆகும்னு பிரகாஷ் சொன்னான். நமக்கு நிறைய டைம் இருக்கு. நம்மளுடைய கல்குலேஷன் படி எல்லாம் சரியா நடந்தா, நம்ம ரெண்டரை மணி நேரத்துல ஊட்டி போயிடலாம். எல்லாரும் வரதுக்கு முன்னாடி, நம்ம திரும்பி வந்துடலாம்."
"கிளம்பலாம்"
எதற்காக நிமல் ஊட்டிக்கு செல்கிறான் என்று, அவள் ஒரு கணம் திகைத்து நின்றாள். அவளிடம் அவன் ஏன் அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை? அது அவளுடைய பெற்றோர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்குமா? அவள் மீண்டும் சுதாவின் இல்லத்திற்கு திரும்பிச் சென்று, தான் மனத்தை மாற்றிக்கொண்டு, நிமலை பார்க்காமலேயே வந்து விட்டதாக கூறி விட்டாள்.
அன்று மாலை, தான் எங்குமே செல்லாதது போல் கட்டிக்கொண்டான் நிமல். அவளுடைய பெற்றோருக்கு எதிராக நிமல் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு சந்தேகம் இருந்தது. நிமலின் கைப்பேசியின், செட்டிங்ஸ்ஸை, ஆட்டோ ரெக்கார்டிங்க்கு மாற்றினாள். அவள் எதிர்பார்த்தபடியே நிமலும், ராஜாவும் பேசிய உரையாடல், அவள் நினைத்தது சரி தான் என்று கூறியது.
கண்களை மூடி அமர்ந்தாள் வர்ஷினி. வர்ஷினியை பசியால் வாட விட்டதற்காக அவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவன் நினைத்திருக்கிறான். அதையே செய்தும் முடித்திருக்கிறான். வர்ஷினிக்கு அவளுடைய பெற்றோரை எண்ணி கவலையாயிருந்தது. ஏனென்றால், அவள் பசியின் கொடுமையை அறிந்தவள் ஆயிற்றே. நிமலின் மீது வருத்தப்பட ஒன்றுமில்லை. அவர்கள் மீது அவனுக்கு இருந்த கோபம் அவள் அறிந்தது தான். மேலும், அவன் செயலில், அவள் மீது அவன் கொண்ட காதலை தான் அவள் உணர்ந்தாள். அவளுடைய பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டு, நிமல் அடைந்த பதட்டம் அவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்று எடுத்துக் காட்டியது. குமணனின் சொத்துக்களை அவன் ரிஷியின் பெயரில் எழுதியது, அவனுடைய மரியாதையை மேலும் கூட்டியது. அவளுடைய பெற்றோரை கொன்றது அவன் அல்ல. அவர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இல்லை. அப்படி இருக்கும் பொழுது, அவன் மீது வருத்தம் கொள்வது அர்த்தமற்றது. அவன் இடத்தில் யார் இருந்தாலும் இதைத் தான் செய்திருப்பார்கள். அவனுடைய பெற்றோரை கொன்று, அவர்களுடைய சொத்துக்களை பறித்துக் கொண்டார் குமணன். சரியான நேரத்தில் விஸ்வநாதன் தம்பதிகள் அவனை பார்க்காமல் போயிருந்தால், நிமலின் வாழ்க்கை என்னவாகியிருக்கும்? அவன் அனாதையாகி இருப்பான்... அவன் வாழ்க்கை தடம் மாறியிருக்கும்... அவன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், குமணனின் மொத்த குடும்பத்தையும் பூண்டோடு அழித்திருப்பான். ஆனால் நிமல், அவனது விரோதத்தை அவள் மீதும் ரிஷியின் மீதும் காட்டியதே இல்லை. மாறாக துப்பாக்கி குண்டை ஏந்தி அவளை காத்திருக்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தன் கண்களை திறந்தாள் வர்ஷினி.