பாகம் 14
சுதாவை அவளது கைபேசியில் அழைத்து பேசினான் பிரகாஷ். கட்டிலில் அமர்ந்திருந்த சுதா, அவர்களுடைய திட்டத்தை கேட்டு, திகிலடைந்து கீழே எகிறி குதித்தாள்.
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீங்க எல்லாரும் என்ன செய்றீங்கன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா?"
"எங்களுக்கு தெரியும் சுதா. நிமல் இப்பவே வர்ஷினியை பாக்கணும்னு சொல்றான்"
"அவரால நாளைக்கு வரைக்கும் காத்திருக்க முடியாதா? நீங்க மாட்டிக்கிட்டா என்ன ஆகுறது? அது உங்களோட மட்டும் போகாது, வர்ஷினிக்கும் பெரிய பிரச்சனையாயிடும்"
"வர்ஷினியை நினைச்சு நிமல் ரொம்ப வருத்தபடுறான். அவன் இப்பவே அவகிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறான்"
"எல்லாம் சரி தான். ஆனா, நீங்க செய்யப் போற வேலை அவளுடைய நிலைமையை மோசமாக்கிடும். அவங்களுடைய வீடு முழுக்க செக்யூரிட்டிஸ், சர்வன்ட்ஸ், சிசிடிவி கேமராஸ் எல்லாம் இருக்கு. இவ்வளவையும் தாண்டி அவளால வெளியே வரவும் முடியாது, உங்களால உள்ளே போகவும் முடியாது."
பிரகாஷின் கையில் இருந்து கைபேசியை வாங்கி கொண்டான் நிமல்.
"சுதா, நான் நிமல் பேசுறேன். எனக்கு தெரியும், அவங்க வீட்டு பின் பக்கத்துல, ஒரே ஒரு இடத்துல மட்டும் கேமரா கிடையாது. அங்க ஒரு சின்ன கேட்டும் இருக்கு"
"ஆனா நிமல், நீங்க மாட்டிகிட்டீங்கன்னா, அவளுடைய வாழ்க்கை நரகமாயிடும்."
"நான் நிச்சயம் அவளை கம்பல் பண்ண மாட்டேன். அவ ரிஸ்க் எடுக்க பயந்தா நான் அவளை தொல்லை பண்ண மாட்டேன். ப்ளீஸ் அவகிட்ட ஒரே ஒரு தடவை கேளு. நான் அவகிட்ட நாளைக்கு கூட சாரி சொல்ல முடியும். ஆனா, அது ரொம்ப சாதாரணமா இருக்கும். நான் எவ்வளவு வருத்தப்படுறேன்னு அவளுக்கு தெரியணும்னு நினைக்கிறேன். எல்லாத்துக்கும் மேல, அவளுக்கு உடம்பு சரியில்லாதப்போ, அவ அழுது இன்னும் அவளுடைய உடம்பை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ் எங்களுக்கு ஹெல்ப் பண்ணு. உன்னால மட்டும் தான் அது முடியும். ப்ளீஸ்... "