பாகம் 46
மறுநாள் காலை
பார்வதியிடமிருந்து விடைபெற தயாரானார் தாட்சாயணி. வர்ஷினியும் சுதாவும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டார்கள். அவர்கள் இன்று காஞ்சிபுரம் செல்கிறார்கள்.
"ஹாப்பி ஜர்னி" என்றாள் வர்ஷினி
"உனக்கும் தான்" என்றாள் சுதா
"எனக்கா? நான் எங்கயும் போகலயே..."
"நான் வாழ்க்கைப் பயணத்தை சொன்னேன்" என்றாள் சுதா.
புன்னகையுடன் தலையசைத்தாள் வர்ஷினி.
"நான் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்" என்றார் பார்வதி.
"நானும் தான், கா. கல்யாணம் ரொம்ப வேகமாக நடந்து முடிஞ்சிடுச்சி. இல்லன்னா, இன்னும் கொஞ்ச நாள் இங்க தங்கியிருக்கலாம்"
"நான் ரிசப்ஷனுக்கு வரலன்னு தப்பா நினைச்சுக்காதே" என்றார் பார்வதி.
"நிச்சயமா இல்ல... நீ முதல்ல நிமலையும் வர்ஷினியையும் கவனி. அவங்க சந்தோஷமா இருந்தா போதும்"
சரி என்றார் பார்வதி. அப்போது தனது பையுடன் அங்கு வந்தாள் அனு.
"சீக்கிரம் திரும்பி வந்துடு" என்றார் பார்வதி.
"ஓகே, ஆன்ட்டி" என்று அவர்களுடன் கிளம்பி சென்றாள் அனு.
......
தூக்கத்திலிருந்து கண் விழித்தான் நிமல். அவன் தலை, வெடிப்பது போல் வலித்தது. தலையை பிடித்தபடி எழுந்து அமர்ந்தவன், தான் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தான். நேற்று நடந்தவற்றை அவன் நினைவு படுத்த முயன்றான். ஆனால், அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்றாலும், ராஜா அவனை குடிக்க வைத்தது நினைவுக்கு வந்தது. அவனை பதட்டம் ஆட்கொண்டது. குடிபோதையில் அவன் என்ன செய்து வைத்தானோ தெரியவில்லையே... ஏற்கனவே, பல பிரச்சனைகள் அவன் தோளில் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கின்றன... போதாததற்கு இது வேறா...?