பாகம் 6
தனது அறையின் ஜன்னலின் பக்கத்தில் நின்று கொண்டு, புன்னகையுடன் நிலவை ரசித்து கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் அப்படி செய்வது இது தான் முதல் முறை. ஏனென்றால், இதற்கு முன், இயற்கையை ரசிக்கும் அளவிற்கு அவளுடைய மனநிலை அமைதியாக இருந்ததில்லை. ஆனால் இன்று, பார்க்கும் அனைத்தும் அவளுக்கு அழகாய் தெரிகிறது. அவள் தனிமையில் புன்னகைக்கிறாள்... நிலா, நட்சத்திரங்களுடன் பேசுகிறாள்... யாரைப் பற்றி? அவளுக்கு அக்கறையுடன் தேங்காய்ப்பால் கொடுத்தானே அவனைப் பற்றித் தான். தன் நெற்றியில் இருந்த ஆறிய வடுவை தொட்டுப்பார்த்தாள் வர்ஷினி. அந்தக் காயத்திற்கு மருந்திடும் பொழுது, அவளுக்கு வலிக்கக்கூடாது என்று நிமல் காட்டிய பொறுமையை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் விழியோரம் ஒரு துளி கண்ணீர் வழிந்தது. அவள் இதழ்களில் புன்னகை பூத்தது.
முதன் முறையாக, அவள் ஒருவருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்... அதுவும் வாழ்நாள் முழுவதும். சட்டென்று அவள் புன்னகை மறைந்தது. அவள் மீது நிமல் அக்கறை காட்டினான் என்பதற்காக, இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது நியாயமா? அவன் அவளிடம் அப்படி நடந்து கொள்ள, பரிதாப உணர்வு கூட காரணமாக இருக்கலாம் இல்லையா? அவளுடைய மூளை சரியாக யோசித்தாலும், அவளுடைய இதயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது. அவள், அவனிடம் கண்டது வெறும் பரிதாப உணர்ச்சி மட்டும் தானா? அவன் உதடுகள் பேசாததெல்லாம் அவன் கண்கள் பேசினவே... மறுபடியும் அவள் புன்னகை புரிந்தாலும், இனம்புரியாத ஒரு பயம் அவள் மனதை ஆட்கொண்டது.
*வேண்டாம் வர்ஷினி... யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே... எதிர்பார்ப்பு வலியைத் தான் தரும். நீ அதிர்ஷ்டம் கெட்டவள். நிமலை போன்ற உயர்ந்த குணம் கொண்ட ஒருவன், உன் வாழ்க்கை துணையாக அமையும் அளவிற்கு நீ அதிர்ஷ்டக்காரி அல்ல. அவனை அடையும் தகுதி உனக்கு இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ உன் பெற்றவர்களைப் பற்றி எப்படி நினைக்க மறந்தாய்? அவர்கள் உன்னை உயிரோடு புதைத்துவிடுவார்கள். ஆனால், நிமல் இல்லாமல் வாழ்வதற்கு, சாவது மேல் இல்லையா?* தன் எண்ண ஓட்டத்தை நிறுத்திவிட்டு, அவள் திடுக்கிட்டாள்.