பாகம் 42
பார்வதியும் தாட்சாயணியும் காசிநாதன் குடும்பத்தை வரவேற்றார்கள். தாட்சாயணியை ஒப்புக்கு கட்டியணைத்தார் சந்திரா.
"எப்படி இருக்கீங்க, அண்ணி...? அண்ணன் எங்க?" என்றார் காசிநாதன்
"அவருக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால, ஆஃபிஸுக்கு போயிருக்காரு. சீக்கிரம் வந்து உங்களை பாக்குறேன்னு சொல்லி இருக்காரு" என்றார் பார்வதி.
"இதை நான் எதிர் பார்த்தேன்" என்றார் சந்திரா ஏளனமாக.
அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல்,
"பிசினஸ்னா அப்படித் தான் இருக்கும்னு எனக்கு தெரியும், அண்ணி" என்றார் காசிநாதன்.
"எங்க உங்க புள்ள?" என்றான் நிமேஷ்.
"அவன் நம்மளை மாதிரி இல்லப்பா... அவன் ரொம்ப பிசி" என்றான் ஆகாஷ் கிண்டலாக.
"உன் மருமக கூட ரொம்ப பிசியா...? அவளையும் உன் பிள்ளை ஆஃபீஸுக்கு கூட்டிகிட்டு போயிட்டானா?" என்றார் சந்திரா.
அப்பொழுது, அனுவுடன் மாடியிலிருந்து இறங்கி வந்தாள் வர்ஷினி. அவளைப் பார்த்து அம்மாவும் பிள்ளையும் சிலையாகி போனார்கள். அவர்கள் கண்களில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"குமணன் பொண்ணு, ரொம்ப அழகா இருக்கா" என்றார் சந்திரா.
"அத சொல்லுங்க... அவள் வந்த வம்சாவளி அப்படிப்பட்டது" என்றான் நிமேஷ்.
தங்களுடைய குடும்பத்தை பற்றி தான் பேசுகிறார்கள் என்ற போதிலும், அவர்களுடைய பேச்சு, வர்ஷினிக்கு அறவே பிடிக்கவில்லை. பார்வதியோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். நல்ல வேளை, அங்கு நிமல் இல்லாமல் போனது, என்று நினைத்தார்.
"நான் உன் மாமனாருடைய தம்பி. என் பேர் காசிநாதன். இவங்க என்னுடைய ஒய்ஃப் சந்திரா, சன் நிமேஷ்"
காசிநாதன் தன்னையும் தன் குடும்பத்தினரையும் வர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார், பார்வதி அதை செய்யும் வரை காத்திராமல்.