பாகம் 51
வீட்டுக்கு செல்ல தயாரானான் நிமல். அவன் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான். பார்வதியும், வர்ஷினியும் அனைத்து பொருட்களையும் பைகளில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்தார் மருத்துவர்.
"கரெக்டான டைமுக்கு மருந்து சாப்பிடு. ரெஸ்ட் எடுத்துக்கோ. இங்கயும் அங்கயும் அலஞ்சிகிட்டு இருக்கக் கூடாது. இன்னும் ஸ்டிச்சஸ் பிரிக்கல, அதனால ஜாக்கிரதையா இருக்கணும்" என்றார் டாக்டர்.
"நீங்க கவலைப்படாதீங்க டாக்டர். வர்ஷினி அவனை பாத்துக்குவா" என்றார் பார்வதி.
"தினமும் அவனுக்கு டிரெஸ்ஸிங் செஞ்சிவிடு, வர்ஷினி. அவனுடைய காயம், ரெண்டு மூணு நாள்ல கம்ப்ளீட்டா குணமாயிடும். அதுக்கப்புறம் நம்ம ஸ்டிச்சை பிரிச்சிடலாம்..."
"ஓகே, அங்கிள்"
"நான் சொன்னதை மறந்துடாத, நிமல்" என்றார் மருத்துவர்
"மறக்க மாட்டேன், அங்கிள்" என்றான்.
"நாங்க கிளம்பறோம்" என்றார் விஸ்வநாதன்.
"டேக் கேர்"
அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள். பின்சீட்டில் வர்ஷினியுடன் அமர்ந்துகொண்டான் நிமல். இனியவர்களின் இருப்பிடம் நோக்கி கிளம்பியது கார். பல யுகங்களுக்கு பிறகு, நல்ல காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தான் நிமல். வர்ஷினிக்கு நெருக்கமாய் அமர்ந்து, தன் கை விரல்களை அவள் விரல்களுடன் பிணைத்துக் கொண்டான்.
இனியவர்களின் இருப்பிடம்
நிமலை ஆலம் சுற்றி வரவேற்றார் பார்வதி.
"இதெல்லாம் அவசியமா, மா?" என்றான் நிமல்.
"எல்லாத்துக்கும் கேள்வி கேட்கிறது அவசியமா?" என்றாள் வர்ஷினி.
அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் விஸ்வநாதன்.
"அப்பாடா... நிமல் வாயை மூட ஒரு சரியான ஆள் வந்தாச்சு" என்றார் சிரித்தபடி.