பாகம் 15
தன்னை எதற்காக கல்பனா அலங்காரித்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை வர்ஷினிக்கு. அவளை நல்ல படாடோபமான ஆடை அணிந்துகொள்ளுமாறு கூறினார் கல்பனா. அது அவளை மேலும் குழப்பியது. அவர்கள் வீட்டில் கார்த்திக்கை பார்த்த போது, அவளுக்கு காரணம் புரிந்தது. கூடவே அவளுக்கு நடுக்கமும் ஏற்பட்டது. இதற்காக தான் அவள் பயந்து கொண்டிருந்தாள். இதை பார்க்கும் போது, குமணன் தன் முடிவில் எவ்வளவு திடமாய் இருக்கிறார் என்று புரிந்தது அவளுக்கு.
"வா டா... எல்லாம் உனக்கு பிடிச்ச சமையல் தான் இன்னைக்கு" என்று குமணன் கூறிய போது அவளால் நம்ப முடியவில்லை.
இது தான் முதல் முறை, அவர் அவளை அப்படி அன்புடன் அழைப்பது. அது கார்த்திக்குக்காக ஆடும் நாடகம் என்று அவளுக்கு தெரிந்திருந்தாலும் அவளுக்கு அது பிடித்திருந்தது. கார்த்திக் எவ்வளவு முயன்றும், வர்ஷினி அவனை ஏரேடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு அது பிடித்திருந்தது. அவன் வர்ஷினியை பார்த்த மாத்திரத்திலேயே, வேரோடு சாய்ந்தான்.
"கார்த்திக், இவ என்னோட பொண்ணு வர்ஷினி..."
நிமிர்ந்து பார்க்காமல், புன்னகைத்தாள் வர்ஷினி.
"கார்த்திகை இன்ட்ரடியூஸ் பண்ண வேண்டிய தேவையே இல்ல. அவன் ரொம்ப பாப்புலர்." என்று இடி இடியென சிரித்தார். குமணன். என்னவோ அது பெரிய நகைச்சுவை என்பது போல.
"ஆனாலும், அது என்னோட டூட்டி. இவரு கார்த்திக், காமேஸ்வரனோட ஒரே மகன்." அவர் கார்த்திக்கின் முதுகை தட்டிக்கொடுத்தார்.
"அவரை யாருக்கு தெரியாம இருக்கும்?" என்றார் கல்பனா.
வர்ஷினியை இழுத்து வந்து கார்த்திக்கின் அருகில் அமர வைத்தார் கல்பனா.
"நீ எந்த காலேஜில படிக்கிற?"
"சுரதா காலேஜ்"
"எங்களோட கட்சி ஆஃபீஸ்ல இருந்து ரொம்ப பக்கத்துல தான் உங்க காலேஜ் இருக்கு. யாராவது உன்கிட்ட வாலாட்டினானா என்கிட்ட சொல்லு. அவங்களை நான் பாத்துக்குறேன்"