பாகம் 35
இனியவர்களின் இருப்பிடம்
பார்வதியை சமாதானபடுத்திக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்.
"நம்ம நிம்மு எங்க போனானோ, எப்படி இருக்கானோ, தெரியலயே..." என்று அழுது புலம்பினார் பார்வதி.
அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை, அவர்களுடைய கவனத்தை ஈர்த்தது. வந்திருப்பது நிமலாகத் தான் இருக்கும் என்று கதவை திறக்க ஓடினார் பார்வதி. வந்திருந்தது நிமல் தான். ஆனால், அவன் வர்ஷினியுடன் மாலையும் கழுத்துமாய் வந்திருந்தான். அது பார்வதிக்கு வாழ்நாள் அதிர்ச்சியை அளித்தது.
நடப்பது என்னவென்று புரியாமல் திருதிருவென விழித்தார் பார்வதி. வர்ஷினிக்கு நிச்சயதார்த்தம் நடந்த அதே நாளில், எப்படி அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான் என்று அவருக்கு புரியவில்லை. நிமல் தன்னிடம் எதையும் மறைக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்வதியால், தன் வாழ்நாளின் மிகப்பெரிய முடிவை, அவன் தன்னிடம் ஒரு வார்த்தை கூடக் கூறாமல் எடுத்துவிட்டதை ஜீரணிக்க முடியவில்லை. அதை சாதிக்க, நிமல் ஏதோ *பெரிதாய்* செய்திருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
"என்ன நிம்மு இதெல்லாம்? என்ன செஞ்சிருக்கே நீ?" என்றார் அதிர்ச்சி மாறாமல்.
அவருடைய இயலாமை நிலையை எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் பார்வையைப் பதித்து கொண்டு, அதே நேரம், தான் இறுக பற்றிய வர்ஷினியின் கையை விடாமலும் நின்றான் நிமல். தலை குனிந்து கொண்டு நின்றிருந்த வர்ஷினியின் கண்கள், தாரை தாரையாய் கண்ணீர் சொரிந்தன.
அந்தக் காட்சியை கண்ட விஸ்வநாதனும் கூட அதிர்ந்து தான் போனார். ஆனால் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சென்ற முறை செய்த அதே தவறை மறுபடியும் செய்ய அவர் தயாராக இல்லை. கோபாலனை ஆலம் கரைத்து கொண்டு வரும்படி ஆணையிட்டு விட்டு, அவர்களை நோக்கிச் சென்றார்.
கோபாலன் ஆலம் கரைத்துக் கொண்டு வந்தார். கோபமாக இருந்த பார்வதி, அங்கிருந்து செல்ல எத்தனித்த போது, விஸ்வநாதன் அவரை தடுத்து நிறுத்தினர்.